Aran Sei

“நாங்கள் மோடியை நம்பினோம் ; வார்த்தை வித்தகர் என்று நினைக்கவில்லை” – டெல்லிப் போராட்டக்காரர்கள்

“ஒவ்வொரு நாள் காலையும், பக்கத்தில் இருக்கும் குருத்வாராவில் குளித்துவிட்டு, காசிபூர் எல்லையில் இருக்கும் போராட்டக் களத்திற்கு வரும் போதெல்லாம், காவல்துறையினரும் அவர்களுடைய சீருடையில் புத்துணர்வோடு நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். ஹாரியானா போராட்டம் மக்களைச் சென்றடைந்ததைப் போல எங்கள் போராட்டமும் பெரிதாக, கொஞ்சம் அடி கொடுங்கள் எனக் கேட்கிறேன். ஆனாலும், காசியாபாத் நிர்வாகம் எங்களுக்குப் பிரசாதத்தைக் கொடுக்க மறுக்கிறது” என்கிறார் 62 வயதான சுக்ராஜ் சிங். போராட்டத்தில் அவர் பங்கேற்கத் தொடங்கி ஆறு நாட்கள் ஆகின்றன. ஆனாலும் அவர் தன் நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தையும் டெல்லியையும் இணைக்கும் இடத்தில் நடக்கும் போராட்டம் பத்தாவது நாளை எட்டியிருக்கிறது. போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் கிண்டலுக்கும், நகைச்சுவைக்கும் ஒரு குறையும் இல்லை. இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் போராட்டத்திற்கு, ஒரு வெங்காயத்தைப் போல, பல அடுக்குகள் இருக்கின்றன. பாரதிய கிசான் சங்கத்தின் டிகைட் பிரிவால் போராட்டம் தொடங்கப்பட்ட போது, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசக் காவல்துறையினரின் வேலையை எளிதாக்க, டெல்லி – மீரட் மேம்பாலத்திற்குக் கீழ் இருந்து போராட்டம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

பிறகு, ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கதம் மற்றும் கிசான் சபா அவர்களோடு இணைந்த போது, சில விவசாயிகள் மேம்பாலத்திற்கு மேலே சென்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை மறித்துப் போராடத் தொடங்கினர்.

ஆர்.கே.எம்.எஸ்-சைச் சேர்ந்த குர்ஷன்ஜீத் சிங், போராட்டத்தில் அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாகவே இருந்தாலும், தாங்கள் வரும் வரை பாலத்திற்குக் கீழே இருந்தவர்கள் “நட்போடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்” என்று சொல்கிறார். “ நாங்கள் புராரியில் இருந்து போராடிக்கொண்டிருந்த போது, அரசாங்கம் எங்களுக்குக் கவனம் கொடுக்கவில்லை என்றுதான் இங்கே வந்தோம். சாலைகளை மறிப்பவர்கள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்கிறார்கள். இனி, எந்த விவசாயத் தலைவரும் தொண்டர்களை ஏமாற்ற முடியாது, இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் பிகேயூ தலைமையைத் தாக்கிப் பேசுகிறார்.

உத்தரகாண்டில் இருந்து வந்த விவசாயிகளோடு உட்கார்ந்து போராடுவதனால், இளைஞர்களுக்கு விவசாயத்தின், விவசாயப் பிரச்சினைகளின் மீதெல்லாம் ஆர்வம்  தூண்டப்படுகிறது என்கிறார். “என்னுடைய நிலத்தை என் மகன்களும், பேரன்களும் உழுவார்கள் எனும் நம்பிக்கையோடு நான் ஓய்வெடுக்க முடியும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் இருக்க வேண்டும் எனும் ஒரு காரணத்தை அரசு எங்களுக்கு வழங்கியிருக்கிறது” எனும் சிங்கிற்கு 11 ஏக்கர் நிலம் இருக்கிறது.

போராடும் விவசாயிகளுக்கு உணவளிப்பது யார்?

சிலர் இதைப் பெரிய விவசாயிகளின் போராட்டம் என்று விவரிக்கின்றனர். உத்தம் சிங் நகரின் பஸ்பூரைச் சேர்ந்த தாரா சிங், “ நான்கு தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் என்னை நம்பி இருக்கின்றன. எனக்குக் கரும்புக்கான தொகை நேரத்திற்குக் கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு எப்படி சோறு போடுவது?” எனக் கேட்கிறார். “பெரிய விவசாயிகள் மட்டும்தான் போராட்டம் பண்ண முடியும், சின்ன விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்” என்கிறார்.

கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து சத்தம் போட்டால், அவமானத்தில் இருந்து தப்பிக்க, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. “யாராவது கேட்டால், சர்தார்ஜி டெல்லியில் இருக்கிறார் என்று சொல்வார்கள்” என்கிறார் நெடிய போராட்டத்திற்குத் தயாராக நிற்கும் 70 வயதான தாரா சிங்.

இந்தப் போராட்டம் பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது என்கிறார் தாரா சிங், “ நினைவுக்கட்டடங்கள் தொடங்கி, விமான நிலையங்கள் வரை நாட்டிற்குச் சொந்தமான அனைத்தையும் தனியாருக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது அரசு. அடுத்து எங்களுடைய வயல்கள்தான். தங்கள் மூதாதையர்கள் சம்பாதித்த சொத்தை அடமானம் வைப்பதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இருக்காது. நாங்கள் மோடியை நம்பினோம். இப்படி வார்த்தை வித்தை செய்பவராக இருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை” என்று சொல்கிறார்.

முகவர்களை இடைத்தரகர்களாக ஏற்க விவசாயிகள் மறுக்கின்றனர். “அவர்களிடம் இருந்து கமிஷன் வாங்குவதனால்தான் இடைத்தரகர்கள் எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாங்களோ, எங்களுக்குப் பணம் தேவைப்படும் போது மண்டியில் இருப்பவர்களோடு பேரம் பேசி குறைந்த வட்டியில் பணத்தை வாங்கிக் கொடுக்கும் சேவையைச் செய்பவர்களாகத்தான் இடைத்தரகர்களைப் பார்ப்போம்” என்கிறார் குருசேவக் சிங். “திறந்த சந்தை என்பதும் ஒரு மோசடிதான். பல வருடங்களாக நாங்கள் அதைப் பரிசோதனை செய்து பார்த்து விட்டோம். பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் வரவில்லை. அதற்கு சரியான விலை கிடைக்கிறதா? வேறு மாநிலத்திற்கு எங்கள் உற்பத்தியை விற்கப் போனால், குறைந்த விலைக்குப் பொருளை விற்கத் தயாராக இருக்கும் வெளியாட்களாகவே பார்க்கப்படுகிறோம். போக்குவரத்து, இழப்பு செலவை எல்லாம் யார் பார்த்துக்கொள்வார்கள்?” எனக் கேட்கிறார்.

“மண்டி அமைப்பு வலுவாக வேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கை பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்பதுவே தங்கள் கோரிக்கை என்கிறார்.

சில காலமாகவே விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், புதிய விவசாயச் சட்டங்கள் அவர்களைப் பொறுமையிழக்கச் செய்தது. “உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிந்த போது, எங்களுக்கு அதனால் எந்த நன்மையும் உண்டாகவில்லை. நெல் பதரை (பயிர்க் கழிவுகளை) எரித்தால் விவசாயிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு என்ன அபராதம்?” என்கிறார் சிங்.

“விவசாயிக்கு, குறிப்பாக தெராய்ப் பகுதியில் இருந்து வரும் விவசாயிக்கு, அவனுடைய கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் வேண்டும். அதனால்தான் பல விவசாயிகளின் பிள்ளைகள் கனடாவிற்குப் போகிறார்கள். இந்த அரசோ, விவசாயிகளை ஏழைகளாக வைத்திருக்க நினைக்கிறது. அவன் கல்வி பெற்றால், எதிர்த்துக் கேள்வி கேட்பான் இல்லையா? என்னை தேச விரோதி என முத்திரை குத்தும் அளவு நான் எதுவும் சொல்லவில்லை தானே?” எனக் கேள்வி கேட்கிறார்.

காசியாபாத் நிர்வாகம், நிலைமை கையை மீறிப் போக விடாமல் கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே வைத்திருக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. டெல்லி பிரதேசத்திற்குள் விவசாயிகளைத் தள்ள காசியாபாத் நிர்வாகம் முயற்சிக்கிறது. ஆனால், விவசாயிகள் அதைக் கேட்பதாக இல்லை. நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கி இருக்கும் துணை மாவட்ட மாஜிஸ்திரேட் சைலேந்திர குமார் சிங், திருக்குறள்களை ஒப்பித்துக்கொண்டும், சீக்கியர்களின் துணிச்சலைப் பாராட்டிக்கொண்டும், ஜாட் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனையும் பாராட்டிக்கொண்டிருக்கிறார். வெள்ளியன்று, உறங்குவதற்காக மேம்பாலத்தில் கூடாரம் அமைக்கக் கூடாது எனக் கூறிப் போராட்டக்காரர்களைச் சம்மதிக்கச் செய்திருக்கிறார்.

“உங்களை போராட்டம் நடத்த அனுமதிக்கிறோம். ஆனால், நெடுஞ்சாலையில் எந்த நிரந்தர அல்லது தற்காலிகக் கட்டமைப்பையோ உருவாக்கக் கூடாது. அப்படி செய்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்” என்று சொல்லியிருக்கிறார்..

“சமூக விரோத நபர்களோ/அமைப்புகளோ போராட்டக் களத்திற்குள் வருகின்றனவா என்பதைப் பார்க்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். அவசிய சேவைகளுக்கான வாகனங்கள் செல்வதற்கு அவர்கள் அனுமதி அளிப்பதைப் பாராட்டுகிறோம். டெல்லி சலோ (டெல்லி செல்வோம்) என்று சொல்லிக்கொண்டு உத்தரப் பிரதேசத்தை நோக்கி இருக்கிறார்கள் என்பதுதான் எங்கள் கவலை” என்கிறார் காசியாபாத் காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிஷேக் வெர்மா.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்