Aran Sei

இட ஒதுக்கீட்டை விழிப்புணர்வோடு கவனிக்க வேண்டும் – ஆனந்த் டெல்டும்டே

credits : indian express

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர்

1946 மே மாதத்தில் வைஸ்ராயின் நிர்வாகம் கலைக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கமாக அது மாற்றப்பட்டது. அம்பேத்கருக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1946, மார்ச்சில் நடைபெற்ற மாகாண கவுன்சில் தேர்தலை, அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ள அமைச்சரவைக் குழு முடிவெடுத்தது

ஷெட்யூல்டு சாதியின் சம்மேளனம் சார்பாக வங்காளத்திலிருந்து ஜோகேந்திரநாத் மண்டல், மத்திய மாகாணத்திலிருந்து ஆர்.பி. ஜாதவ் ஆகிய இரண்டே இரண்டு பேர் மட்டுமே வென்றிருந்ததால், அம்பேத்கர் அரசியல் நிர்ணயசபையில் நுழைய முடியவில்லை . எனவே ஜோகேந்திரநாத் மண்டல் தனது தொகுதியிலிருந்து அம்பேத்கரை தேர்ந்தெடுக்கப்படச் செய்தார். அம்பேத்கர், 1946 ஆகஸ்ட் 12ம் நாள், பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு எழுதிய கடிதத்திலும், அக்டோபர் மாதம் லண்டனுக்குச் சென்று நேரிலும் தலித்துகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், அம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமது ஒதுக்கீட்டிலிருந்து, தேசியம் பேசிய இஸ்லாமியர் ஒருவரை இடைக்கால அரசாங்கத்திற்கு அறிவித்ததால், ஜின்னா தங்கள் ஒதுக்கீட்டிலிருந்து ஜோகேந்திர நாத் மண்டல் பெயரை அறிவித்தார். இதனை அம்பேத்கர் விரும்பவில்லை.

இப்போது லண்டனிலிருந்து திரும்பிய அம்பேத்கர், தலித்துகளுக்கு தனி வாக்குரிமை பிரச்சினையை எழுப்பி, 1947 மார்ச் 25ல் சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். அதில் ஈடுபட்ட ஷெட்யூல்ட் சாதியின் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை அரசு கைது செய்தது. இந்த சத்யாகிரகப் போராட்டம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக ஷெட்யூல்ட் சாதியின் ஒருங்கிணைப்புச் சங்கத்திற்கு எதிர்மறையான விளம்பரத்தையே ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி ஜெகஜீவன்ராமை தலித் முகமாகக் காட்டியதைத் தொடர்ந்து அம்பேத்கர் கேட்டபடி சிறுபான்மை அந்தஸ்து தலித்துகளுக்கு கிடைக்கவில்லை.

இப்படி தமது முயற்சிகளெல்லாம் தோல்லியுற்றதைத் தொடர்ந்து அம்பேத்கர், காங்கிரஸ் மீதான தனது கடுமையான நிலையை தளர்த்திக்கொண்டார். அதன் காரணமாக, அரசியல் நிர்ணய சபையில் நேரு தாக்கல் செய்த ‘வழிகாட்டு நெறிகள்’ எனும் தீர்மானத்தின் மீது அம்பேத்கரை பேச வைத்தார். அன்று 1946 டிசம்பர் 17 ஆம் நாள், அம்பேத்கர் ஆற்றிய வீரியமிக்க உரை ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம்

அரசியல் சட்டத்தில் தலித்துகள் தொடர்பாக, தான் வலியுறுத்தும் பாதுகாப்புரிமைகள் பற்றி அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் ஒரு மனுதாக்கல் செய்தார். அது தலித்துகளுக்கான பாதுகாப்புரிமைகளை மட்டும் வரிசைப்படுத்தவில்லை, இந்தியாவிற்கு அரசு சோசியலிசம் அமைப்பது எனும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. ஒட்டுமொத்த சுதந்திர இழப்பீடு தந்து நிலங்களை தேசியமயமாக்குதல், அந்த நில உடைமையாளர்களை கிராமப்பகுதி கூட்டுறவுப் பண்ணைகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசே நிதி, தொழில்நுட்ப உதவி வழங்குதல்; அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகளைத் தேசிய மயமாக்குநல்; அவற்றை நிர்வகித்தல், அனைத்து மக்களுக்கும் அரசே காப்பீடு எடுத்தல் என்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது.

அம்பேத்கர் இவற்றை முன்மொழிந்து தமது சிறப்புமிகு டிசம்பர் 17ஆம் தேதி உரையில் பேசும்போது, ‘இப்படியான ஒரு சோஷலிச பொருளாதாரம் இல்லாதபட்சத்தில், பின்னாளில் வரப் போகிற அரசாங்கம் சமூகரீதியில், பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில் எப்படி மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்ய முடியும்? என்று வினா தொடுத்தார். அதற்கு விடையாக உடனே அவர், ‘இவற்றைச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லையென்றாலும் நடைமுறைப்படுத்தமுடியுமா என்றால் ஏமாற்றம்தான் பிறக்கிறது’ என்று அதனை ஏற்றுக்கொள்ளும் தொனியில் பேசிய அம்பேத்கர் ’எனவே அந்தக் கருத்தை இத்தோடு விட்டு விடுகிறேன்’ என்று சொல்லி பின்வாங்கினார்

இது குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது பேச்சாளர் பேசும் சில பேச்சுகள் இப்படித்தான், அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து விடுகின்றன என்கிறார். தொடர்ந்து அம்பேத்கர், தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த முயற்சித்தார். இந்து மகாசபைத் தலைவர் ஒருவரை சந்தித்து கோரக்பூர் மாநாட்டில் விவாதிப்பதற்காக சில கருத்துகளை முன்வைத்தார். அது நடந்ததா? அதன் பின்விளைவுகள் என்ன? என்பது பற்றி எதுவும் தகவல் இல்லையென்றாலும், தலித்துகளைத் தொடர்ந்து தனித்தே வைத்திருக்கவும், அரசியல் தளம் கிடைக்காதிருக்கவும் செய்யும் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சி சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அம்பேத்கரின் தொகுதி பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் வசம் போனதால், அவரது இடமும் காலியானது. எனவே, டாக்டர் ஜெயகரின் பதவிக்காலம் முடிந்ததால் காலியான பம்பாய் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் பெயரை முன்மொழிந்து அவரை தேர்வு பெறச் செய்தது. பின்னர் அம்பேத்கரை அரசியல் சட்டவரைவுக் கமிட்டியின் பெருந்தலைவராகவும், நேருவின் முதல் அமைச்சரவை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் ஆக்கியது

யாருடைய முன்முயற்சியில் இவையெல்லாம் நடந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் தலித்துகளை அமைதிப்படுத்தி வைப்பதற்கு என அதிகாரம் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்டது. இவற்றைச் செய்த அரசியல் தத்திரம் காந்தியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் சர்தார் பட்டேல், எஸ்.கே.பட்டேல், ஆச்சாரிய தாண்டே, நேரு என பலரது பெயர்களைச் சொல்கிறார். இறுதியாக காந்தியின் ஒப்புதலுடன்தானே இது நடந்திருக்க முடியும்

காந்திதான் அம்பேத்கரை மந்திரி சபைக்குள் நுழைக்க காரணமாக இருந்தார் என்கிறார் ஜாஃப்ரிலா. காந்தி பற்றிய ஆரம்பகால வாலாற்றாசிரியர் சி.பி. கைர்மோட் என்பவரின் கருத்தைப் பின்பற்றி, ராஜ்மோகன் காந்தியும் அப்படித்தான் சொல்கிறார். தாம் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கரே 1953ம் ஆண்டு நிராகரித்து, அரசியல் ஜனநாயகம் அற்ற சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்கள், இந்த அரசமைப்புச் சட்டத்தை உடைத்தெறியும் ஆபத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது என்கிறார். பெரும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதும், இந்த அரசியல் சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் கடுமையாக உழைத்தார். அதற்கு முக்கியக் காரணம் தலித்துகளுக்கான நலன்களைப் பெறுவதுதான்.

ஏற்கெனவே அவர் தமது கடும் முயற்சியால் காலனி ஆட்சியின்போது பெற்ற நலன்களுக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதுதான் முதன்மையான அம்சமாக இருந்தது. தலித்துகள் அந்தப் பயன்களை நிராகரிப்பதென்பது அரசியல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை நிராகரிக்கப் படவில்லை. முக்கியமாக காந்தி உள்ளிட்ட, அனைத்து உயர்சாதி சீர்திருத்தவாதிகளின் தீண்டாமை எதிர்ப்பு மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைத் தவிர, தலித் விடுதலைக்கான வேறு எந்த நடவடிக்கையும் அரசியல் சட்ட உருவாக்கத்தின்போது மேற்கொள்ளவில்லை.

தீண்டாமையும் ஓர் அம்சமாக இருக்கக்கூடிய சாதியம் நிலைத்திருக்க வேண்டுமானால், சாதியை நிலைத்திருக்கச் செய்யவேண்டும். எனவே தலித்துகளுக்கென சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு சாதியும் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது. காலனி ஆட்சி ஏற்கெனவே ஷெட்யூல்ட் சாதி என்று நிர்வாக ரீதியில் தலித்துகளை வைத்திருந்தது. அதை யே இட ஒதுக்கீடும், பிரத்தியேகமான சாதி என்கிற வகையில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் இந்தக் கருத்தை புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அரசியல் சட்டம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என மீறியது.

அந்த வகையில் ஷெட்யூல்டு என்பதில் இருந்த அழுக்கு அகற்றப்பட்டு, ஆனால் அதே உள்ளடக்கத்துடன் கூடிய புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. பிரிவு 310 ன் படி சமூகரீதியிலும் கல்வியில் பின் தங்கியுள்ள பிரிவு என்று அடையாளப்படுந்தப்பட்டது. இது காலனி ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்த உண்மையான சமூகநீதியை ஆளும் வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றியமைத்தது. ‘ஒரு பிற்பட்ட சமூகத்தின் தொடர் பிற்போக்குத்தனமான சூழலில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, சமூகப் பொருளாதாரத்தோடு பொருத்துவது தவறானது; நடைமுறைக்கு ஒவ்வாதது’ என்றார் அம்பேத்கர்.

முதலாவதாக அது காலனி ஆட்சியின் பிரத்தியேகமான ஒரு கொள்கை என்பதாக அதன் நோக்கத்தை மீறுகிறது அதன்மூலம் உயர் சாதியினரின் உதவிக்கரத்தை எதிர்பார்க்கும் வேளையில் கருத்தியல் ரீதியாக தலித்துகளைப் பிற்பட்டவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கீழானவர்களாகவும் இயலாதவர்களாகவும் ஆக்குகிறது. இது சாதி அமைப்பின் அதே தன்மையைக் கொண்டதுதான். இந்த அமைப்பு தரும் பயன்களைப் பெற்றுக் கொள்பவர்களாகத்தான் தலித்துகளை அது பார்க்கிறது. உரிமை என்று எதையும் அவர்கள் கோரமுடியாத நிலையில் வைக்கிறது. சொல்லப் போனால், சக மனிதர்களைச் சமமாக நடத்த முடியாத ஒரு பிற்பட்ட சமூகமாகத்தான் இது இருக்கிறது. சக மனிதர்களுக்கு உரியதைத் தர இயலாத சமூகமாகத்தான் இது இருக்கிறது. ஒரு பொதுவான கொள்கை என்ற அளவில், இட ஒதுக்கீட்டை இந்த விழிப்புணர்வோடுதான் பார்க்க வேண்டும். தமது மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய பங்கைத் தராதது இட ஒதுக்கீடு என்பதை தலித்துகள் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், இடஒதுக்கீடு என்பது தம்மைத் தாமே அழித்துக் கொள்வதாக உள்ளது.

உண்மையில் இந்த இட ஒதுக்கீடு என்பதே வரலாற்றுப் பிழையை அழிப்பதற்கான சாதி ஒழிப்பிற்கான ஒரு முன்முயற்சியாக உயர் சாதியினர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நடப்பில் உள்ள வடிவம், மக்களைப் பிரிப்பதற்கான ஓர் ஆயுதமாக உள்ளது. செயல்பாட்டளவில் கோரும் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததாகவும் உள்ளது. அனைத்து சாதியினருக்கும், விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அறிவுக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. இப்படியான நடைமுறைப் பிழைகள் நிறைய உள்ளன.

உதாரணமாக, தனிப்பட்ட ஒருவருக்கோ அவர் குடும்பத்திற்கோ தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகை, அவர்களது சாதியின் பெயரால் வழங்கப்படுகிறது. ஆனால் அந்தச் சலுகை பெறாதவர்கள் சாதியின் சுமையைத் தாங்க வேண்டியுள்ளது. நீடித்து நிற்பதன் மூலம், அது சம்பந்தப்பட்ட சாதிக்குள்ளேயே உள் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

(ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள ‘தலித்துகள் – நேற்று, இன்று, நாளை என்ற நூலில் இருந்து ஒரு பகுதி)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்