Aran Sei

பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் – பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்

டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட 21 பேருக்கு பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரைகள் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோருக்கும் அவ்வாணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.லோகூர் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய ஆணையம் அரசியல் பிரமுகர்கள், மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை அழைத்து அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகிறது.

விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தபோது, மேற்கு வங்க மாநிலத்தில் அலைப்பேசிகளில் உரியவரின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஊடுருவியது, கண்காணித்தது மற்றும் அவற்றை பதிவு செய்தது குறித்து இக்குழு விசாரிக்கும் என்று கூறியிருந்தார்.

சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பேசியுள்ள விசாரணைக் குழுவின் அதிகாரி ஒருவர் பேசுகையில், “சம்மன் அனுப்பப்பட்டவர்களில் பலர், தங்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆணையத்தின் முன் வருவோம் என்று பதிலளித்துள்ளனர். ஆகவே, விசாரணையின் செயல்முறை விரைவில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான என்.எஸ்.ஓ, செல்போன்களில் ரகசியமாக ஊடுருவி அதில் இருக்கும் தகவல்களை திருடும் பெகசிஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி செல்போன்களில் இருக்கும் மின்னஞ்சல்கள், உரையாடல்கள், தொடர்பு எண்கள், இருப்பிட தரவு, புகைப்படங்கள் மற்றும்  காணொளிகளை தனித்தனியாக திருட முடியும். மேலும், செல்போனின் உரிமையாளருக்கே தெரியாமல் செல்போனில் இருக்கும் மைக் மற்றும் கேமராவை ஆன் செய்து நடவடிக்கைகளை ரகசியாமாக பதிவு செய்ய முடியும்.

எஸ்.எஸ்.ஓ குழுமத்தின் வாடிக்கையாளர்களால் வேவு பார்க்கப்பட்ட அல்லது இலக்காக்கப்பட்டதாக கருதப்படும் சுமார் 50 ஆயிரம் எண்கள் கொண்ட தரவுகளின் தொகுப்பை சர்வதேச ஊடக கூட்டமைப்பு பகுப்பாய்வு செய்தது. இது குறித்து பல செல்போன்களை தடயவியல் சோதனை செய்ததில் வெற்றிகரமாக பெகசிஸ் செலுத்தப்பட்டது அல்லது செலுத்த முயற்சிக்கப்பட்டது  கண்டறியப்பட்டுள்ளது.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்