Aran Sei

சிபிஐ விசாரணை கோரும் அனிஸ் கான் தந்தை – விசாரணை சரியான திசையில் செல்வதாக காவல்துறை தகவல்

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் அனிஸ் கானின் மர்ம மரணம் தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணை சரியான திசையில் நகர்ந்து வருவதாகவும், இந்நடவடிக்கைகள் 15 நாட்களில் முடிவடையுமெனவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹௌவுரா மாவட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிஸ் கான் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பிப்பிரவரி 18ஆம்  இரவு காவல்துறை சீருடையுடன் கானின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள், அனிஸ் கானை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளியது தான் உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மர்மமான முறையில் உயிரிழந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் – உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

காவல்துறையைச் சேர்ந்த யாரும் அனிஸ் கானின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அனிஸ் கான் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனிஸ் கானின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி, கொல்கத்தா அலியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி பேரணியின்போது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

அனிஸ் கானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி, இந்திய மாணவர் சங்கம் (SFI) போன்ற மாணவர்கள் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன.

அதைத் தொடர்ந்து, பிப்பிரவரி 21ஆம் தேதி, ஹௌரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ள மம்தா பானர்ஜி, “அனிஸ் கானின் மரணம் குறித்து விசாரிக்க, காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

இதனையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை மேற்கு வங்க காவல்துறை அமைத்தது.

பிப்ரவரி 24ஆம் தேதி, அனிஸ் கான் மரணம் தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை 15 நாட்களில் தாக்கல் செய்யுமாறு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள காவல்துறை இயக்குநர் மனோஜ் மாளவியா, “இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருவதால் எங்களால் எந்த விவரங்களையும் வெளியிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மையைக் கண்டுபிடிப்போம்” என்ற கூறியுள்ளார்.

மறுபுறம், அனிஸ் கானின் அலைபேசியை மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க அவரின் குடும்பம் சம்மதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சிஏஏ எதிர்ப்பு போராளி மர்ம மரணம் – சிபிஐ விசாரணை கோரும் தந்தை

முன்னதாக, மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் அனிஸ் கானின் உடலைத் தோண்டி எடுத்து, மீண்டும் உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (பிப்ரவரி 26), அனிஸ் கானி  சொந்த கிராமமான ஹௌரா மாவட்டத்தில் உள்ள அம்டாவிற்கு சென்ற சிறப்பு விசாரணைக் குழுவை, அக்கிராமத்தினர் போராட்டம் நடத்தி வெளியேற்றியுள்ளனர்.

சிறப்பு விசாரணைக் குழு விசாரணை தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருக்கும் கானின் தந்தை சலீம் கான், “எஸ்.ஐ.டியின் விசாரணையில் நான் மகிழ்ச்சியடையவில்லை. நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை வேண்டும்” என்று கோரியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்