Aran Sei

‘கூட்டாட்சி மீதான பாஜகவின் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ : 14 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

னநாயகத்தின் மீதும், இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் பாஜக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று (மார்ச் 31), காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவரான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் இக்கடிதத்தை மம்தா பானர்ஜி அனுப்பியுள்ளார்.

இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

இக்கடிதத்தில், “ஜனநாயகத்தின் மீதும், இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் பாஜக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும். என்னுடைய இந்த கவலைகளைத் கூறும் பொருட்டு, இந்தக் கடிதத்தை பாஜக ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், உங்களுக்கும் நான் எழுதுகிறேன். நாம் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“டெல்லி மாநிலத்தில் அம்மக்களால் ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை முடக்கும் பொருட்டு, ‘டெல்லி தேசியத் தலைநகர் அதிகாரத் திருத்த மசோதாவை’ மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. உண்மையை கூறுவதானால், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனைத்து அதிகாரங்களையும் கொள்ளையடித்து, அதை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு கையளித்துவிட்டது. டெல்லியின் அறிவிக்கப்படாத நிர்வாக அதிகாரியாகத் அந்த துணைநிலை ஆளுநர் மாறிவிட்டார்.” என்று மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை: தூக்கி வீசப்படும் கூட்டாட்சி தத்துவம்

“பாஜக ஆட்சியில்லா பல மாநிலங்களில், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு, ஆளுநர்கள் வழியாக மத்திய அரசு தொந்தரவுகளை அளிக்கிறது. அவர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துகிறது. குறிப்பாக சொல்வதானால், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பாஜக கட்சியினர் போலயே நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நடுநிலையாக செயற்படுவதில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், “பாஜக அரசானது தங்களுடைய தனிப்பட்ட பணிகளுக்காக, விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்க  துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றைக் கொண்டு பாஜக அல்லாத தலைவர்களுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் தொந்தரவு தர வைக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் சூழலில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் அமலாக்க துறையின் உதவியோடு சோதனையிட வைக்கிறார்கள். இந்த சோதனைகளெல்லாம், பாஜக அல்லாத தலைவர்களின் வீடுகளில்தானே தவிர, பாஜக தலைவர்களின் வீடுகளில் நடப்பதேயில்லை.” என்று மம்தா பானர்ஜி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

மத்திய பாஜக அரசு திட்டமிட்டே, பாஜக அல்லாத மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கிறது என்றும் இதன் காரணமாக, மக்கள் நலனுக்குத் தேவையான நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்துவதில் நாம் சிக்கலை எதிர்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய மேம்பாட்டுக் கவுன்சில், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், திட்டக்குழு ஆகியவற்றை மோடியின் தலைமையிலான மத்திய அரசு கலைத்தது மட்டுமின்றி, அதிகாரமில்லாத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இறுதியாக சொல்வதானால், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள், மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகள் வரலாற்றில் இதைவிட மோசமாகச் சென்றதில்லை. அனைத்துக்கும் பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்குதான் காரணம்.” என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்