Aran Sei

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், ஆவணங்கள் கசிந்ததன் பின்னணியில் இருக்கும் காரணங்களை விளக்கத் தவறிய டெல்லி காவல்துறையின் புலனாய்வு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? எனக் கேள்வி எழுப்பியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் இந்தச் செயல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டிய நியாமான மற்றும் முறையான விசாரணையை மறுக்கிறது என்றும், நீதிமன்றம் கூறியிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தின்போது பேருந்துகளுக்குத் தீ வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அசிப் இக்பால் தன்ஹா, 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில், நீதிமன்றம் இதைத் தெரிவித்திருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதிற்கு சீன வைரஸ்தான் காரணம் – அமைச்சர் அனில்தேஷ்முக் தகவல்

தன்ஹா தனது மனுவில், ”நான் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம், ஊடங்கங்களில் கசிந்திருப்பது, பொது சமூகத்தில் என்மீதான பாரபட்சமான பார்வைக்கு வழிவகுக்கும். தகவல் எப்படி கசிந்த என்பது தொடர்பான விவரங்களை வழங்கச் செல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “ஊடகங்களில் ஆவணங்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை” எனக் குறிப்பிட்டதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, டெல்லி காவல்துறையால் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை, என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது என்றால், ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

அரசு மௌனமாக இருப்பது விவசாயிகளுக்கு எதிராக திட்டமிடுவதை காட்டுகிறது – பாரதிய கிசான் சங்கம்

இந்த ஆவணங்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளால் கையாளப்பட்டது என்பது அதிர்ச்சியளிப்பதாக கூறிய நீதிபதி, ”இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்ட விதம், திருட்டு வழக்கில் அவர்கள் நடந்துகொள்வதை விட மோசமானது” எனத் தெரிவித்ததாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மொத்த நிகழ்வும் விரும்பத்தகாதது என, டெல்லி காவல்துறை சார்பாக ஆஜரான அமித் மகாஜனின் கருத்துக்குப் பதிலளித்த நீதிபதி, “இது விரும்பதகாதது மட்டுமல்ல. வழக்கு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாரபட்சமானது. இது அவமதிப்பானது” எனத் தெரிவித்ததாக, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணைக்குக் காணொளி வாயிலாக ஆஜராகுமாறு, டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு சிறப்பு ஆணையருக்கு உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை மார்ச் 5 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்