Aran Sei

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் முகநூல் – வைகோ குற்றச்சாட்டு

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌சே படங்களைப் பகிர்பவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் இலங்கை அரசின் கைக்கூலியாகச் முகநூல் செயல்படுகிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “நவம்பர் 26 ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது. அந்த நாளில், ஆதரவு அற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லம் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவர், அடுத்த 60 நாள்களுக்கு, நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்து இருக்கின்றனர்.இவை எல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் என, முகநூல் முத்திரை குத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

‘சிஏஏ போராட்ட வீடியோக்கள் வேண்டும்’ – சிறையில் உள்ள ஜேஎன்யூ மாணவி கலிதா மனுதாக்கல்

இரண்டாம் உலகப் போரில் பலரைக் கொன்று, பலரின் மரணத்திற்கு காரணமான ஹிட்லரின் புகைப்படமும், அவர்குறித்த செய்திகளும் முகநூல் முழுக்க இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஹிட்லரின் புகைப்படத்தை பகிர்வதற்கும் பரப்புவதற்கும் எந்த்த் தடையும் இல்லை. அதுபோல,“இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சே படத்தைப் பகிர எந்தத் தடையும் இல்லை. காந்தியைக் கொன்ற கோட்சே படத்தைப் போட்டு, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் சூட்டுகின்ற புகழ் ஆரங்களுக்குத் தடை இல்லை.” ஆனால், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைப் பகிர்ந்தால், முகநூல் முடக்குவது பக்கசார்பானது என்று வைகோ கூறியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரசுடன் தொடர்பில் இருக்கும் 7 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பாஜக திரிணாமூல் காங்கிரசிடையே வலுக்கும் மோதல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, சிங்கள அரசு இடித்த்தற்காகச் சென்னையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தின் முன்பு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனவரி 11 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு கருத்து உரை ஆற்றினர்; கண்டன முழக்கங்களை எழுப்பிய வைகோவின் உரையை, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை, பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தி, மக்கள் பார்வையில் இருந்து மறைக்க முகநூல் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதங்களை கடந்து திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு – நீதிமன்றத்திடம் மீண்டும் குட்டு வாங்கிய உ.பி., அரசு

சமூக வலைதளங்களுள், உலக அளவில் முதல் இடத்தைப் பெற்று இருக்கின்ற முகநூல் (facebook) நிறுவனத்தின் போக்கு, தான்தோன்றித் தனமாக ஆகி வருகின்றது என்றும் தாங்கள் வைத்ததே சட்டம், யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற இறுமாப்பும், ஆணவமும், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுவதாகவும் தெரிவித்த அவர், முகநூலின் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கு நீடிக்குமானால், உலக நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடுகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை மதிப்பது இல்லை என, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகநூல் மீது குற்றம் சாட்டி வருவதை சுட்டிக்காட்டிய அவர்,. பல நாடுகளில் முகநூல் தளத்திற்குப் பல கட்டுப்பாடுகளையும், பல கோடி ரூபாய் தண்டமும் விதித்து இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.

விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?

மேலும்,“ஒவ்வொரு நாட்டிலும், தாங்கள் விரும்பியவாறு அரசுகள் அமைய வேண்டும் என்பதற்காக, முகநூல் தளம் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், முகநூல் தளத்தின் இந்திய உயர் அதிகாரி அங்கி தாஸ், ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்தது, வெட்ட வெளிச்சம் ஆனது. கண்டனைக் கணைகள் பாய்ந்தன. எனவே, வேறு வழி இன்றி அவரைப் பதவி நீக்கம் செய்தது” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து

“இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக முகநூல் தளம் இயங்கி வருகின்றது. உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது.
எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழகச் சட்டமன்றத்திற்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விழைவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்