Aran Sei

பரபரப்பான சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் – கடுமையான போட்டி

மெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலுடன் செனட் எனப்படும் அமெரிக்க மாநிலங்கள் அவையின் 35 உறுப்பினர்களுக்கான தேர்தலும், பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவையின் 435 இடங்களுக்கான தேர்தலும் நடக்கிறது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நாட்டின் 50 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் 538 பேர் கொண்ட தேர்தல் வாக்காளர் குழுவின் மூலம் தீர்மானிக்கப்படும். 270 பேரின் ஆதரவைப் பெறும் வேட்பாளர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாத முதல் செவ்வாய்க் கிழமை நடைபெறும் தேர்தலில், இந்த ஆண்டு இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். ஜோ பிடன் தனது துணை அதிபராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் கிழக்கு நேரப்படி இரவு 10.30 (இந்திய நேரம் காலை 9.00) நிலவரப்படி ஜோ பிடன் தேர்தல் குழு 131 வாக்காளர்களையும், டொனால்ட் டிரம்ப் 98 தேர்தல் குழு  வாக்காளர்களையும் வென்றுள்ளனர் என்று தி கார்டியன் லைவ் நிலவரம் தெரிவிக்கிறது. ஜோ பீடன் மொத்தம் 3.7 கோடி வாக்குகளையும், டிரம்ப் மொத்தம் 3.8 கோடி வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதிபர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் போர்க்கள மாநிலங்கள் என்று அழைக்கப்படும் ஃப்ளோரிடா (29 தேர்தல் குழு வாக்காளர்கள்), பென்சில்வேனியா (20 தேர்தல் குழு வாக்காளர்கள்) ஆகியவற்றின் வாக்கு நிலவரங்கள் இரு தரப்பிலும் கவனிக்கப்படுகின்றன.

  • ஃப்ளோரிடாவில் 91% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டிரம்ப் 56 லட்சம் வாக்குகளையும் (51.3%), ஜோ பிடன் 52 லட்சம் வாக்குகளையும் (47.8%) பெற்றுள்ளனர்.
  • பென்சில்வேனியாவில் 32% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டிரம்ப் 52.1% வாக்குகளையும், ஜோ பிடன் 45.2% வாக்குகளையும் பெற்றுள்ளனர். 1992 முதல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்று வந்த இம்மாநிலத்தில் 2016 தேர்தலில் 0.7% வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சி பெரும்பான்மை கொண்ட அமெரிக்க மாநிலங்களவையில் (செனட்) அவர்களது பெரும்பான்மை நீடிக்குமா, ஜனநாயகக் கட்சி போதுமான இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கைப்பற்றுமா என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகளில் தீர்மானிக்கப்படும். ஒரு மாநிலத்திலிருந்து 2 உறுப்பினர்கள் வீதம் 50 மாநிலங்களை மொத்தம் 100 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு 35 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய நேரம் காலை 9.00 மணி நிலவரப்படி மாநிலங்களவைக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 43 பேரும், குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 41 பேரும் உள்ளனர் என்று சிஎன்என் தெரிவிக்கிறது. தேர்தல் நடக்கும் 35 இடங்களில் 19 இடங்களுக்கான முடிவுகள் இதில் அடங்கும்.

பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படும் மக்களவையில் 76 இடங்களில் ஜனநாயகக் கட்சியும், 100 இடங்களில் குடியரசுக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 435 இடங்களில் 176 இடங்களுக்கான முடிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

செவ்வாய்க் கிழமை கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கு முன்பே சுமார் 10 கோடி வாக்காளர்கள் ஏற்கனவே தபால் மூலம் வாக்களித்திருக்கிறார்கள் என்கிறது தி ஹிந்து செய்தி. 2016 அதிபர் தேர்தலில் மொத்தம் பதிவான மொத்த வாக்குகளே 13.6 கோடி  குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு அமெரிக்காவின் பல மாநிலங்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் தேர்தலுக்கான வழிமுறைகளையும் விதிமுறைகளையும் தனித்தனியாக வகுத்துக் கொள்கின்றன. இந்தியாவைப் போன்று மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. 21% வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது என்றும், 57% பேருக்கு அவர்கள் கேட்டால் அனுப்பி வைக்கப்பட்டது என்றும், 22% பேருக்கு காரணம் சொல்லிக் கேட்டால் அனுப்பி வைக்கப்பட்டது என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால், தபால் மூலம் வாக்களிப்பது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் மற்றும் அவரது கட்சியான குடியரசுக் கட்சி அதை எதிர்க்கின்றனர். கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்ற, டிரம்ப் ஆதரவாளரான தபால் துறையின் தலைமை அதிகாரி, லூயி டிஜாய் தபால் மூலம் வாக்களிப்பதை சீர்குலைப்பதற்காக நடவடிக்கைகள் அறிவித்ததாக ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டுகிறது. தபால் நிலையங்களின் வேலை நேரத்தைக் குறைப்பது, தபால்களை கையாளும் வசதிகளை குறைப்பது, ஊழியர்களுக்கு ஓவர்டைம் மறுப்பது, தபால் சேகரிக்கும் பெட்டிகளை குறைப்பது ஆகிய இந்த நடவடிக்கைகளை 20 மாநிலங்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து முறையீடு செய்தன.

இதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் தேர்தல் முடிவது வரை தபால் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்கிறது தி ஹிந்து செய்தி.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹில்லாரி கிளின்டனை தோற்கடித்து தனது முதல் பதவிக் காலத்தை வென்றார். அமெரிக்க அரசியல் சட்டப்படி ஒரு நபர் இரண்டு தொடர்ச்சியான பதவிக் காலங்களுக்கு மட்டுமே அதிபராக பணியாற்ற முடியும்.

2016 தேர்தலில் ஹில்லாரி கிளின்டன் டிரம்பை விட ஒட்டு மொத்தமாக அதிக வாக்குகளை பெற்றிருந்தாலும், மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர் குழுவில் டிரம்ப் கூடுதல் ஆதரவு பெற்று அதிபரானார்.

2016 தேர்தல் குழு வரைபடம்
2016 தேர்தல் குழு வரைபடம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் உயிரிழந்த நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் அதிபர் டிரம்பின் மருத்துவக் கொள்கை, சீனாவுடனான மோதல் கொள்கை, அமெரிக்கா முதலில் என்ற காப்புவாதக் கொள்கை ஆகியவை விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன.

சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 99,000 புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டன. முக்கியமான ஊசலாடும் மாநிலங்களான மிச்சிகன், பென்சில்வேனியா ஆகியவற்றில் பாதிப்பு மோசமாக உள்ளது என்கிறது தி ஹிந்து.

நவம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு வரும் தபால் வாக்குகளையும் சேர்த்துக் கொள்வது பற்றி டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்க உச்சநீதி மன்றம் பென்சில்வேனியாவின் இந்த முடிவை உறுதி செய்திருக்கிறது. “இது வரைமுறையற்ற, கட்டுபாடற்ற மோசடிக்கு வழி வகுக்கும், ஒட்டு மொத்த சட்ட அமைப்பையும் சீர்குலைக்கும்” என்று டிரம்ப் ட்வீட் செய்திருக்கிறார்.

“இது தெருக்களில் வன்முறைக்கு இட்டுச் செல்லும்.” என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

டிரம்பின் இந்த ட்வீட் “தவறாக வழிநடத்துவது” என்ற அறிவிப்பால் ட்விட்டரால் மறைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை உறுதிப்படுத்தப்படாத வெற்றி அறிவிப்புகளை அவ்வாறு குறிப்பிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளன. பேஸ்புக் “வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன” என்ற குறிப்புடன், ராய்ட்டர்ஸ் அசோசியேட்டட் பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பக்கங்களுக்கு பயனர்களை அனுப்ப உள்ளது.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் குறைந்த பட்சம் இரண்டு செய்தி நிறுவனங்களில் முடிவுகளை உறுதி செய்த பிறகே வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக அறிவிப்பதை ட்விட்டர் அனுமதிக்கும். தானியங்கி செயலிகள் மூலம் தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் ட்விட்டர் மென்பொருள் மூலமாகவும், ஊழியர்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்