Aran Sei

திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  சார்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்துள்ளது.

நேற்று முன்தினம்(அக்டோபர் 26), திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள பனிசாகர் நகரத்தில் மசூதி ஒன்று தாக்கப்பட்டது. ரவுதிலா மற்றும் ரோவா கடைத்தெரு பகுதிகளில் இருந்த இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டதோடு, அவர்களின் வீடுகளை தாக்கிய கும்பல் காவிக் கொடியை நட்டு வைத்துள்ளது.

இதுகுறித்து, காவல்துறை உதவி ஆணையர் வி.எஸ்.யாதவ் பேசுகையில், “மாநிலத்தின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதரீதியிலான பிளவை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதனை காவல்துறை முறியடித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட மசூதிகளுக்குக் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மாற்ற தேவையில்லை’- கண்காணிப்புக் குழு பரிந்துரை

இச்சம்பவம் குறித்து பேசிய கூடுதல் காவல் ஆய்வாளர் சுப்ரதா சக்கரவர்த்தி, “ஒரு மசூதியையும் சிறுபான்மையினரின் வீடுகளையும் கடைகளையும் விஷ்வ இந்து பரிஷத் பேரணியின்போது சில சமூகவிரோதிகள் தாக்கியிருக்கிறார்கள். நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. சட்ட ஒழுங்கை உரிய முறையில் பராமரிப்பதற்கு மாநிலம் முழுவதும் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் கூடுதல் கவனத்தோடு இருக்கிறோம். இவ்வன்முறை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் விஸ்வ இந்து பரிஷத்தின் பேரணி காட்சிகள் பரவலாக பகிரப்பட்டது. காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்த வன்முறை தொடர்பாக, அடையாளம் தெரியாத சில விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதரீதியிலான பிரிவினை உருவாக்கும் பல்வேறு முழக்கங்கள் பேரணியில் எழுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எல்லா காணொளி ஆதாரங்களையும் திரட்டி நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை குழு அமைத்ததை வரவேற்கிறோம் – திருமாவளவன்

144 தடை அமல்:

இத்தகைய பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பனிசாகர் பகுதியில் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்முறையை கண்டித்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளது.

“இந்த வன்முறை காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடைபெற்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். உரிய விசாரணை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆளும் பாஜக அரசு உரிய நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்காத வகையில் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாபெண்டு பட்டாச்சாரியா, “இது ஒரு அரசியல் சதி. விஸ்வ இந்து பரிஷத் ஒரு சமூக இயக்கம். உரிய அனுமதி பெற்றுதான் இந்த பேரணியை நடத்தினார்கள். ஆளும் பாஜக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் மாநிலத்தின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி இதற்கு பின்னால் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: the wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்