கடந்த 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஒன்றிய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறி மூன்று விவசாயச் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், விவசாய துறையில் கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதாகவும் குற்றம்சாட்டிய விவசாயிகள், இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு உலகெங்கும் வாழும் இந்தியர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.
தொடக்கத்தில் இருந்தே விவசாயிகள் போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்த பாஜக அரசு, காங்கிரஸ் இடதுசாரிகள் தூண்டிவிட்டு விவசாயிகள் போராட்டம் செயவ்தாகவும், காலிஸ்தான் தனி நாடு கேட்டுப் போராட்டம் செய்வதாகவும் குற்றம்சாட்டியது. மேலும், இந்தியாவை உலக அரங்கில் விவசாயிகளை இழிவுப்படுத்துகிறார்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளே இல்லை எனவும் ஒன்றிய அரசு தெரிவித்தது.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில், செப்டம்பர் மாதம் தொடங்கி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட சீக்கியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு முறை சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பேஸ் பால் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டனர், அவர்களுடைய வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சில விஷமிகள் இந்திய சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக சீக்கியர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இந்த சம்பவங்களைத் தொடர்ச்சியாக விசாரித்து வந்த ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை, விஷால் ஜுட் எனும் 24 வயது இந்திய இளைஞரைக் கைது செய்தது. இவர் ஹரியானா மாநிலத்தின் கர்ணல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
நீதிமன்ற விசாரணையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சோதனை செய்ததில் அவருடைய ஆஸ்திரேலிய விசா முடிந்து போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய ஜுட், “இந்தியக் கொடியின் பெருமையை நிலைநாட்டத்தான் இது போன்ற சம்பவங்களில் தான் ஈடுபட்டேன்” என்று கூறினார். இருப்பினும், செய்த குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர், தன்னை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மன்றாடினார்.
”ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியர்களைத் தாக்கிய நபர்” எனும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான விஷால் ஜுட்டை, விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கபில் மிஷ்ரா, கர்ணல் எம்பி சஞ்சய் பாட்டியா, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தொடர் முயற்சியில் இறங்கினர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் கடுமையான அழுத்தத்தை கொடுத்தனர்.
இந்நிலையில 6 மாத சிறைத்தண்டனைக்கு பிறகு, ஆஸ்திரேலிய அரசால் விஷால் ஜுட் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே, ”ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் எவரையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று விஷால் ஜுட் வெளியேற்றப்பட்டுள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.
Attempts to undermine Australia’s social cohesion will not be tolerated. https://t.co/uQKM3bMGeX
— Alex Hawke MP (@AlexHawkeMP) October 16, 2021
சீக்கியர்களைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் விஷால் ஜுட்டுக்கு ஹரியானா மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆடி காரில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை கையில் ஏந்தியபடி விஷால் ஜுட் வலம்வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ऑस्ट्रेलियाई धरती पर #खालिस्तानी गीदड़ों के झुंड में अकेले #तिरंगा लहराण आले शेर भाई #VishalJood का घर आण पर भोत भोत स्वागत है🇮🇳🇮🇳🇮🇳#हरयाणवी_हाँ_दबया_कोनी_करते💪💪@major_pawan @BajrangPunia pic.twitter.com/Zi7UG9MwdU
— DELHI KA BADSHAH (@BADSHAH_MEHUL) October 17, 2021
வெளிநாட்டில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு அந்நாட்டு அரசால் விரட்டியடிக்கப்பட்ட நபருக்கு, இந்தியாவில் உற்சாக வரவேற்பு அளிப்பது, எதை வெளிப்படுத்துகிறது என பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.