Aran Sei

அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்

புதுகூர் பேட்டை கண்ணகி, முருகேசன் கொலை தமிழக வரலாற்றில் ஒரு துயரக்குறியீடாய் நிலைத்துவிட்டது. ஊர்க் கூடி சமத்துவத் தேர் இழுக்க அறைகூவல் எழுப்புவதற்கு பதிலாக சாதி மாறி  காதல் செய்த ‘குற்றத்திற்காக’ ஊர்க் கூடி கொலை செய்தது சாதியாதிக்க கூட்டம். சாதியை வெறும் புத்தகம் வழியாக மட்டுமே புரிந்து கொள்ளாமல்  வட்டார அளவிலான சாதிய முரண்களை கணக்கில் கொண்டு உரையாடலை நிகழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. 18 ஆண்டுகளுக்குமுன் நிகழ்த்தப்பட்ட கொலைக்கு இன்னும் நீதி வேண்டி காத்திருக்கின்றனர் முருகேசன் குடும்பத்தினர். முருகேசன் ,13 ஏக்கர் நிலம் கொண்ட பொறியியல் பட்டதாரி என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பொருளாதாரம் மாறினால் எல்லாம் மாறிவிடுமா என்கிற கேள்வியையும் நாம் எழுப்பி பார்க்க வேண்டிய நேரமிது.  இந்த வழக்கை 18 ஆண்டுகாலம் தன் தோளில் சுமந்து வரும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அரண்செய் இதழுக்காக பிரத்யேகமாக கொடுத்த நேர்காணல் இது. பட்டியல்சமூக மக்கள் சாதியின் காரணமாக பலியான சென்னகரம்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம் அவர்களை நேர்காணல் செய்ய அவரிடம் நேரம் வாங்கி தந்து உதவிபுரிந்த வழக்கறிஞர் சேகுவேரா பாண்டியன் மற்றும் தோழர் அருள் முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி.

வழக்கறிஞர் என்பது ஒரு தொழிலாக இல்லாமல் சமூக பணியாற்றுவதற்கான களமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற யோசனை உங்களுக்கு எப்போது வந்தது,  வழக்கறிஞராக இருந்து சமூகப் பணியாற்றுவோராக நீங்கள் எப்போது மாறினீர்க்ள்?

கல்லூரியில படிக்கும் போதே சமூக அநீதிகளை பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். அப்போதே இந்திய இளைஞர் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை உருவாக்கினோம். அதை தொட்டு பல விசயங்களை படித்து தெரிந்துகொண்டோம். சமூக பணி செய்ய வேண்டுமென்றால் சட்டம் படித்து வழக்கறிஞராக இருந்தால் வலுவாக செய்யலாம் என்று  நினைத்தோம். அது போல் என்னுடன் படித்த பலர் சட்ட கல்லூரியில் சேர்ந்தார்கள்

சட்டம் படிப்பதற்கு முன்பே சமூகம் குறித்த புரிதல் உங்களுக்கு இருந்தது அதனால்தான் நீங்கள் சட்டத்துறை தேர்ந்தேடுத்தீர்களா? உங்கள் பின்புலம் குறித்து சொல்லுங்கள்?

நான் தலித் அல்லாத குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய தந்தை ஒரு விவசாயி. எங்கள் பண்ணையில் எல்லா சாதி ஆட்களும் வேலை பார்ப்பார்கள். நாங்கள் சிறுவனாக இருந்த போது அவர்களைத் தொடாதே தீட்டுப் பட்டுவிடும் என்பார்கள். நானும் என் தம்பியும் உடனே தொட்டுவிடுவோம். தொட்டு கைய காட்டுவோம் தீட்டு ஒன்னும் ஒட்டலயே என்போம். நம் கண்முன் நடப்பது அநீதி என்று தெரியும் போது அதை எதிர்ப்பதுதான் அறம்.

எங்கள் வீதியில் ஏழு, எட்டு குடும்பங்களுக்கு ஒரு பிள்ளையார் கோவில் உண்டு.. எங்களிடம் வந்து ஒரு படி எண்ணெய், தேங்காய் வாங்கி  கொண்டு போய் பண்டாரம் ஒருவர்  பூஜை செய்வார். பிள்ளையாருக்கு முன்னாடியே பிள்ளையாருடைய வாகனமாக பெருச்சாலி இருக்கும். எண்ணெய் தலையில வைத்துக்கொண்டு தேங்காய் உடைப்பார். ஒரு மூடியை அவர் வைத்துக்கொண்டு மற்றொன்றை எங்களுக்கு கொடுப்பார். மீதி எண்ணெயை எடுத்துகொண்டு போய்விடுவார். நான் பிள்ளையார் சிலையைக் கீழே தள்ளி விட்டுவிடுவேன். எல்லாரும் ஏண்டா! சாமிய இப்படி பன்றனு திட்டுவாங்க. கல்லை செதுக்கி வச்சுட்டு, உங்களை எல்லாம் ஏமாத்துறாங்க நீங்கள் எல்லோரும் துணையாக  இருக்கிறீர்கள் என்றுசொல்லிட்டு போய்விடுவேன்.

நினைவை வதைக்கும் வாதை – கண்ணகி முருகேசன் நினைவு நாள்

1974 ஆம் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன்.  கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் பேச மாட்டார்கள். பலர் எங்களை நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணி இருந்தனர். நாங்கள் ஒரு 20 பேர் கொண்ட குழுவாக இயங்கினோம். மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட மார்க்க்ஸிய நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தோம்.  புதுநிலவு என்கிற  பத்திரிகையை  நடத்தினோம்.  சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே அரசியல் கட்டுரைகள் எழுதினோம். மனிதன் என்கிற பத்திரிகையை நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தினார்கள்.  அந்த நேரத்துல கல்கத்தாவில் போராட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல் அமைப்புப் பெண்களை சிறையில் வன்கொடுமை செய்தனர். பெண்களின் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டிருந்து. அது குறித்து பிலிட்ஸ் என்கிற இடதுசாரி பத்திரிகையில் செய்தி வந்தது.

அதுபோன்ற நிகழ்வுகளைப் படிக்கும்போது சில நாட்கள் தூக்கமே வராது. அவ்வளவு கொடூரங்களை அம்பலப்படுத்தி எழுதியிருந்தனர். அதை தொடர்ந்து நாங்களும் இந்தியா எரிகிறது என்றொரு கட்டுரையை எழுதினோம். அதை பார்த்துவிட்டு எங்களை விட வேகமாக எழுதியிருக்கிறீர்கள் என்று  கூறி மனிதன் பத்திரிக்கையிலிருந்து வந்து 1௦௦ பிரதிகள் வாங்கிச் சென்றார்கள். மதுவோ, புகைபிடிக்கும் பழக்கமோ எங்களுக்கு இல்லை நல்ல காரிங்களில் மட்டுமே  ஈடுபடுவோம். சட்டக்கல்லூரியில் தமிழ் வழிக்கல்விக்காகப் கட்சி வேறுபாடின்றி மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினோம்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

நாங்கள் ஒரு 30 முதல் 35 பேர் வரை சட்டக்கல்லூரி  பேருந்தை எடுத்துக்கொண்டு சட்டப்பேரவை நோக்கி சென்றோம். காவல்துறை எங்களை கண்டுகொள்ளவில்லை, கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று விட்டோம். உள்ளே சென்று  தமிழ் வாழ்க!!!  தமிழ் வாழ்க!!!  என்று  முழக்கமிட்டோம். உடனே காவல்துறை அங்குவந்து பிரச்சினையில்  ஈடுபடாதீர்கள் என்று கூறினார்கள். உடனே நாங்கள் கட்டிடத்தைக் காட்டி  மேலே பாருங்கள் தமிழ் வாழ்க என்று  தானே எழுதியிருக்கிறது. நீங்களாவது  கூறிவிட்டு செல்லுங்கள் என்றோம், அவர்களும்  கூறிவிட்டு சென்றனர். அப்போது அங்கு மத்திய சென்னை  காவல் ஆணையர் வந்தார். நாங்கள் உடனேயே எங்களது கோரிக்கையான தமிழ்வழி வகுப்பு குறித்து கூறினோம். அவரும் நல்லது தானே  என்று  கூறினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னப்பநாடார் ,  சிபிஐ யை சேர்ந்த கே.டி.கே.தங்கமணி உள்ளீட்டோர் சட்டமன்ற கூட்டம் முடிந்து வெளியே வந்தனர். அவர்கள் எங்கள் பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர். தமிழ்வழியில் கீழமை  நீதிமன்றம் நடக்க வேண்டும் அது தான் சட்டம், அதற்கு தமிழ் வழியில் வகுப்பு நடக்க வேண்டும் அல்லவா? என்று கூறினோம். சட்ட அமைச்சர் ஒரு அதிகாரியை அனுப்பிவைத்தார். இந்த கோரிக்கை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த 4 மாணவர்களை அவர்கள் அழைத்தனர்.

அகில் கோகோய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக என்.ஐ.ஏ மேல்முறையீடு – கேள்விக்குறியாகிறதா நீதி?

உடனே திமுகவைச் சேர்ந்த மாணவர்கள் நாங்கள்  செல்லுகிறோம்  என்று  கூறினர். உடனே நங்கள் ஒரு காகிதத்தையும் பேனாவையும் கொடுத்து அவர்கள் என்ன கூறுகிறார்களோ  எழுதி வரவேண்டும் நீங்கள்  ஒன்றும்  கூறக்கூடாது. பிறகு நாம் சென்று சட்டக்கல்லூரியில் விவாதித்து முடிவு எடுப்போம் என்று  தெரிவித்தோம். அவர்கள் அங்கு சென்றதும், முதலிலேயே சட்ட அமைச்சர்  தமிழில் வகுப்பு துவங்குகிறோம்  என்று  முதல்வர் கூறிவிட்டார். ஆனால், தேர்வு ஆங்கிலத்தில் தான் இருக்கும்  என்று  கூறியுள்ளார். அதன் பின்னர் இதுகுறித்து நாங்கள் சட்டக்கல்லுரியில் விவாதித்தோம். அடுத்த பத்து நாட்களுக்கு  பின்னர் மீண்டும் பேருந்து  எடுத்துக்கொண்டு சட்டப்பேரவை நோக்கி சென்ற போது எங்களை காவல்துறை கைது  செய்தது. அங்கு ஒரு காவல்நிலையத்தில்  எங்களை வைத்திருந்தனர். போராட்டத்தை யார் ஒருகினைக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாததால் குழம்பி தவித்தனர். இந்நிலையில் நாங்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து மாணவரும், மாணவியரும் சட்டமன்றம் நோக்கி சென்றுவிட்டனர். மாணவர்கள்  கூட்டமாக திரண்டதை கருணாநிதி பார்த்தார். மாணவர்கள்  கூட்டமாக திரண்டலயே அது தமிழக முழுவதும் செய்தியாக பரவிவிடும் என்பதால் உடனே தமிழிலயே  தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. அபோது தமிழில் புத்தகமே கிடையாது. அதனால் நாங்களே நூலகம் சென்று  குறிப்பு எடுத்தோம். அந்த ஆண்டு நான் தான் முதல் மதிப்பெண் பெற்றேன். அவ்வாறு தான் நாங்கள் படித்து வந்தோம்

1978 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தேன். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்ட கே.வி. சங்கரன் என்னுடைய சீனியராக இருந்தார்.. ஒரு காலகட்டத்தில் கட்சியின் மீது நம்மிக்கையிழந்து அதிலிருந்து விலகிவிட்டார். அவரிடம் நான் ஜூனியரா சேர்ந்தேன். மக்களுக்கான வழக்குகளை எல்லாம் எடுத்து வாதிட்டோம்.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

மார்க்சியத்தை தவிர எல்லாமே அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகள் தான். ஒரு சமூகத்தை சமத்துவ சமூகமாக கட்டமைப்பது மார்க்சியம் மட்டும்தான். தத்துவம் என்ற அடிப்படையில் உலகம் தழுவிய அளவில் மார்க்சியம் ஒன்று தான் தத்துவம்.

சமூகப் பிரச்சினைகளுக்கான சீர்திருத்த நடவடிக்கையாக பல தத்துவங்கள் இருந்தன. மார்க்சியம் மட்டுமே சமூகத்தைச் சீரமைத்து சமத்துவ சமூகமாக, எந்த சுரண்டலுக்கான வழியும் இருக்க கூடாது என்று  தெளிவாக விளக்கியது. மாணவப் பருவத்தில் படிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேல் ஈடுபாடு வரவில்லை. மார்க்க்ஸிய தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் எந்தக் கட்சியிலும் சேர முடியவில்லை. நக்சல் பாரி இயக்கமும் மார்க்சியத்தை விட்டு விலகி போவதாக இருந்தது. இன்றும் இடதுசாரி கருத்தில்  உடன்பாடு கொண்டவர்கள் கட்சியில் இல்லாமல் மார்க்ஸிய கருத்துச் சட்டகத்திலிருந்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் வழக்கறிஞராக மாறிய பிறகுதான் அம்பேத்கரை படிக்க ஆரம்பித்தோம். மூன்று மணி நேரம் தான் சட்டக்கல்லூரி மீதி நேரங்கள்ல குடிசை பகுதிகளில் வேலை பார்ப்போம். சாதியப் பாகுபாடுகள் நிகழும்போதெல்லாம் ஒடுக்கப்படுகின்ற மக்கள் பக்கம் நின்று வழக்காடுவோம். பெரும் குடிசைப்பகுதியை இடித்துவிட்டுதான் அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வள்ளுவர் கோட்டம் கட்டினார்கள். அதை எதிர்த்து வழக்காடினோம்.

1983 ஆம் ஆண்டு குஜராத்தில் பழங்குடி மக்களுக்கு சட்டப் பணி செய்பவராக நான்காண்டுகள் இருந்தேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சட்ட உதவிக்கு தலைவராகவும்  இருந்த பகவதி அவர்களின் வழிகாட்டுதலில்  பழங்குடிகளுக்குப் பணி செய்தோம்.பின்னர் 1987 ஆம் ஆண்டு இங்கு வந்துவிட்டேன். பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கடலூர் பகுதிகளில் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலக் கட்சிகள் பட்டியல் மக்களுக்கான துணைநிலை அமைப்பை வைத்திருந்தனர். அவ்வமைப்புகள் சரியாக இயங்காததால் விடுதலைச் சிறுத்தைகள் உருப்பெற்றது.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

விடுதலைச் சிறுத்தகள் கட்சிக்காக பிணை எடுப்பது, வழக்காடுவது என்று வழக்கறிஞர் குழுவாக இயங்கி வந்தோம்.  திருமாவளவன் சிதம்பரத்தில்  முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அப்போது பட்டியல் சமூக மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் ஏறத்தாழ 400க்கும் அதிகமான பட்டியல் சமூக மக்களின் வீடுகளை சாதி ஆதிக்கவாதிகள் அடித்து உடைத்தார்கள். அதற்காக வழக்குத் தொடுத்தோம். வன்னியர்கள் குறைவாக இருந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் வீட்டை அடித்து நொறுக்கி இருந்தனர்.  அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழக்குத் தொடுத்தோம்.

உங்களுடைய அனுபவத்தில் மிக முக்கியமான தலித் வழக்குகள் குறித்து சொல்லுங்கள்?

மேலவளவு முருகேசன் படுகொலை வழக்கு 1997 யில் நடந்தது. ஆனால் அதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு மேலவளவுக்கு அருகில் உள்ள சென்னகரன்பட்டியில் அம்மாசி, வேலு என்ற இருவரை  கொலை செய்தனர்.  அந்த பகுதியில்  இருந்த 9 ஏக்கர் கோவில் நிலத்தை அரசு தரப்பு ஏலம் விடுவது வழக்கம். பெரும்பாலும் கள்ளர்கள் தான் ஏலம் எடுக்க வருவார்கள். அவர்களே குறைவான விலைக்கு  ஏலம் எடுத்துக்கொண்டு பிரித்து கொள்வார்கள். அப்போது பள்ளர் சமுகத்தைச் சேர்ந்த அதிகாரி ஏலம் விடுவதற்கு வந்துள்ளார். அவர் தலித் மக்களிடம் நீங்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாமே என்று கூறியுள்ளார். அவர்களும் பணம் திரட்டி கொண்டு சென்றனர். உடனே எங்களுக்கு எதிராக பறையர்கள் ஏலம் கேட்பதாவென கள்ளர்கள் ஏலத்தை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், தலித்களோடு மிகவும் இணக்கமாக உள்ள கள்ளர் சமுகத்தைச் சார்ந்தவர் மட்டும் ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்துள்ளார். மிச்ச நிலத்தை தலித்துகள் ஏலம் எடுத்தனர். பின்னர் அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் கூட இவர்களுக்கே விட்டு கொடுத்துள்ளார். இவ்வாறு அந்த நிலத்தில் நெல் பயிரிட்டிருந்த போது வளர்ந்து வந்த நிலையில் அதையும் கள்ளர் சமூகத்தினர் அழித்து, தாக்கியுமுள்ளனர். இதன் காரணமாக தலித் மக்கள் மூன்று மாதம் ஊரை விட்டே வெளியேறினர். அதற்கு பின்னர் அவர்கள் திரும்பி வந்ததற்கு பின்னர் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டமெல்லாம் முடிந்து இரவு பேருந்தில் வீடு திரும்பிய போதுதான் அம்மாசி, வேலுவைக்  கொன்றுள்ளனர்.

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

அதன் பின்னர்  பஞ்சாயத்து தேர்தல்  1996ல் வரும் போது பெண்களுக்கும்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு செய்திருந்தனர். அதில் தான் மேலவலவு முருகேசன் தேர்தலில் நின்றார். பறப்பசங்க எங்களுக்கு தலைவர் ஆவதானு 6 பேரை கொன்றனர். அப்போது அதை எதிர்த்து மேலூரில்  சாலை மறியல் செய்த ஒருவரை கொன்றனர். அடுத்து புதுகூர்பேட்டை கண்ணகி முருகேசன் கொலைவழக்கு.

இந்த வழக்குகளை எவ்வாறு கையாள்கிறீர்? வேறு வழக்குப் பதிந்து எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை வழக்காக  மாற்றிய அனுபவம் ஏதேனும் உள்ளதா?

எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை வழக்காக பதிய வைக்க மக்கள் மட்டுமல்ல நாங்களும் போராட வேண்டி இருக்கிறது. மேலவளவு வழக்கில் அங்கு செல்வதற்கு முன்னரே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். காவல்துறையிலும் சில  ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை பெரும்பான்மையாக யாரும் கண்காணிப்பதுமில்லை. பலவற்றில் தவறாகவும் எழுதுகிறார்கள். முதல் தகவல் அறிக்கை  போட்டதிலிருந்து கண்காணிக்கிறோம். பல இடங்களில் வன்கொடுமை சட்டப் பிரிவில் வழக்குப் பதியாமல்  இருப்பார்கள். சென்னக்கரம்பட்டி கொலைக்கு சாதாரன பிரிவில் வழக்குப் பதிந்திருந்தார்கள்.  வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதியக்கூறி நீதிமன்றத்தை நாடினோம். பின்னர்தான் வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதியப்பட்டது.

கண்ணகி, முருகேசன் வழக்கு குறித்துச் சொல்லுங்கள்.

1993-ல தான் கண்ணகி முருகேசன் படுகொலை குறித்து நக்கீரன் இதழ் வழியாக தெரிய வந்தது. அதைப்  படித்துவிட்டு சென்னையிலிருந்து ஒரு வழக்கறிஞர், நெய்வேலியிலிருந்து வழக்கறிஞர்  துறைக்கண்ணு உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு கொலை நடந்த இடத்திற்குச் சென்றோம். நாங்கள் சென்ற முன்று நாட்களுக்கு முன்னரே இரு தரப்பினரையும் கைது செய்து சென்றுள்ளனர்.

முருகேசனும் கண்ணகியும் அவர்களாகவே விஷம் குடித்து இறந்துவிட்டதால்  உடலை எரித்ததாக வழக்குப் பதியப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் மத்திய புலன் விசாரனை அமைப்புக்கு (சிபிஐ) வழக்கை ஆராய உத்தரவு வழங்கியது. சிபிஐ யும் வன்கொடுமை தடுப்பு சட்த்தில் வழக்கை பதியவில்லை. வெகுநாட்கள் கழித்து அந்தப்பிரிவில் பதிந்தார்கள்.. முக்கியமாக முருகேசனுடைய சித்தாப்பவையும், இன்னொரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரையும் முருகேசனுக்கு விஷம் கொடுத்ததாக கூறி கைது செய்திருந்தனர். கண்ணகியையும் முருகேசனையும் மரத்தில் கட்டி வைத்து வன்னியர் தரப்புதான் என்று புரிய வைக்கவே நீதிமன்றத்தில் பல மனு அளித்தோம். வன்னியர்களுக்கு சில பட்டியல் சாதி வழக்கறிஞர்களும்   ஆதரவாக செயல் பட்டார்கள்.

நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி

நாங்கள் ஒரு குழுவாக இயங்கி கொண்டிருக்கும் போது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் அந்த வழக்கில் உள்ள நியாயத்தை கண்டு ஆதரித்தார்கள். மேலவளவு வழக்கிலும் ஒரு குழுவாக இருந்து செயல்படும் நீதிபதிகளில் எங்களை அழைத்துச் சென்று அழைத்து வழக்கு குறித்து தனிப்பட்ட முறையில் விசாரிப்பார்கள். கண்ணகி முருகேசன் வழக்கை தொடர்ச்சியாக விரட்டி விரட்டி கண்காணித்து வந்தோம்.  இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. நாட்கள் ஆக ஆக பயந்து கொண்டு தங்களுடைய கருத்திலிருந்து சாட்சிகள் பின்வாங்கி கொள்வார்கள்; அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

முருகேசனுடைய குடும்பம் வழக்கிலிருந்து பின்வாங்க  கூடாதென்று   வலுவாக இருந்தது. தலித் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் வழக்கை திரும்பப்பெறுமாறு முருகேசன் குடும்பத்தை அறிவுறுத்தினர். ஆனாலும் முருகேசன் குடும்பம் பின்வாங்கவே இல்லை. வழக்கு வன்னியர்களுக்கு எதிராக தீர்ப்பானால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது என்று சிலர்கூறினர். இன்ஜினியரிங் படித்த பையனே இறந்து விட்டான். இனி நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் நான் வழக்காடுவேன் என்று முருகேசனின் தந்தை உறுதிபடக் கூறினார்.

மேலவளவு வழக்கு எடுத்து நடத்தும் போது எங்களுக்கு நேரடியாகவே மிரட்டல் வந்தது. என்னை கொல்வதற்கு அடியாட்களை அனுப்பி வைத்தார்கள். கண்ணகி முருகேசன் வழக்கில் சாட்சிகளை ஓரளவுக்கு சொல்ல வைத்து இருக்கிறோம். முருகேசனின் சித்தியும் அத்தையும் முருகேசன் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவருடைய சித்தியை சாட்சியாக கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் முருகேசனின் அத்தை ”என்னுடைய அண்ணியும் இந்த கொலையை நேரில் பார்த்தார்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.  இந்தச் சூழ்நிலையில் அவர்களை சாட்சியிலிருந்து மறைக்கவே முடியாது. வழக்கு 18 ஆண்டுகள் கழித்து ஒரு முடிவுக்கு வர இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

கண்ணகி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எங்கள் அமைப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், வழக்கு தொடுத்தோம். இந்த கொலை வழக்கு சம்பந்தமான , வழக்கு நடத்தியதே இந்த அமைப்புதானே. இவர்கள்தான் நீங்கள் முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டு, கட்சிகளுக்கெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள்.” என்று நீதிபதியே கேட்டார்.

ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கு இன்றைய சட்டரீதியான அணுகுமுறைகள் மட்டும் போதும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?  தலித் பிரச்னைகளை சட்டத்திற்கு வெளியே எவ்வாறு புரிந்து கொள்வது? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

சட்டப் போராட்டம் என்பது ஒரு அம்சம்தான். சாதியை ஒழிப்பதுதான் மிக முக்கியமான வேலை. அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் பாபாசாகேப்  அம்பேத்கரை மையப்படுத்தி பல வேலைகளை நாங்கள் செய்துவருகிறோம். பாபாசாகேப்  அம்பேத்கர் புத்தரைக் கண் திறந்தது போன்று வரைந்துள்ளார். கண் திறந்திருத்தல் என்பது விழிப்பு நிலை. பாபாசாகேப்  அம்பேத்கர் சொல்கின்ற பௌத்தம் என்பது விழிப்புநிலை. நாங்கள் பாபாசாகேப்  அம்பேத்கரின் வழியில் பௌத்த பொதுவுடமை இயக்கம் என்கிற இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம். இங்கிருப்பவர்கள் அம்பேத்கரையும் புரிந்துகொள்ளவில்லை, மார்க்சியத்தையும் புரிந்து கொள்ளவில்லை. சமூக மாற்றத்தில் மிக உறுதியாக இருந்தால் மட்டுமே சாதி ஒழிப்பு சாத்தியமாகும். சாதி ஒழிப்பில்  உறுதியாக இருந்தால் தான் சமூக மாற்றம் வரும். பாபாசாகேப்  அம்பேத்கர் தெளிவாக பௌத்தத்தை புரிந்துக்கொண்டார். அதனால்தான், அவர், “நீங்கள் பௌதத்தை ஏற்றுக்கொள்ளாமல், பொதுவுடமை சமூகத்திற்கான பணிகளை மக்கள் மத்தியில் வளர்க்க முடியாது.” என்று சொன்னார்.

ஒரு இடதுசாரி பௌத்தராக இருக்க முடியுமா?

புத்தர்தான் முதன்முதலான பொதுவுடைமையின் கூறுகளை வெளிப்படுத்தியவர். சமத்துவத்தை வெளிப்படுத்தியவர். துறவியாக சேர்வதற்கு சித்தி புத்தரிடம் வருகிறார். ஆணும் பெண்ணும் இருக்கும் இடமானால், இதை சமாளிக்க முடியுமா என்று அவர் தடுமாறுகிறார். உடனிருக்கும் துறவிகள், “நம்மை பெற்றது தாய்தானே. சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்துதானே வாழ வேண்டும்.” என்று கூறிய பின்தான், சித்தியையும் மனைவியையும் துறவியாக ஏற்றுக்கொள்கிறார்.முன்மாதிரியாக நடந்து காட்டினார். அதனால்தான், பாபாசாகேப்  அம்பேத்கர் புத்தரை குரு என்று சொல்கிறார். இதை நீங்கள் மார்க்சியத்தோடு சேர்த்து, மக்கள் மத்தியில் கருத்துக்களை எடுத்து சென்றால்தான் எடுபடும் என்பது பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து.

கிறித்துவம் சாதியை ஏற்பதில்லை. ஆனால், இந்தியாவிற்கு வருகையில் இங்குள்ள சாதி கட்டமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. அதேபோல், பௌத்தம் தலித் சமூகத்தை தாண்டி, மொத்த சமுதாயத்திற்கும் விரிவடைகையில், அதில் சாதி இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கலப்பு திருமணமும் சமபந்தி போஜனமும் சாதி ஒழிப்பிற்கான வழியல்ல என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். அவற்றுக்கு முன்னாள் நாம் வைக்க வேண்டிய ஒன்றுள்ளது. இந்து மதம் பரப்பிய மூட நம்பிக்கைகள் நிறைந்த இதிகாசங்கள் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூற்றியுள்ளது. அதைத்தான் நாம் உடைக்க வேண்டும். அதை செய்யும்போது, நீயும் நானும் சமம்தானே, நீ யார் என்னை தூர நில் என்று சொல்வது என்று மக்கள் கேட்க தொடங்குவார்கள். நீ அடிமையல்ல நீ எல்லோருக்கும் சமமானவன் என்று புரிந்துக்கொள்ள வைத்துவிட்டால், அவர் புரட்சியாளன் ஆகிவிடுவான். இந்து – பார்ப்பனிய மதத்தின் பித்தலாட்ட கூறுகளை ஒழிக்க வேண்டும்.   இயக்கத்தை நடத்துவதுதான் பௌத்தம். கம்யூனிஸ்ட் கட்சிகளில் பார்ப்பன்ர்கள் முன்னிலையில் இருந்ததால், அம்பேத்கர் மார்க்ஸியம் செத்துவிட்டது என்றார். அதேநேரம், நான் மார்க்ஸின் மாணவன். புத்தர் என் குரு என்கிறார்.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

அம்பேத்கரும் பெரியாரும்  கம்யூனிஸ்ட் கட்சியை நடத்தியிருக்க வேண்டும். பார்பனர்கள் கட்சியை எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிட்டார்கள் என்று விடியல் சிவா சொல்வார். சாதியை ஒழிப்பதே தன் பிரதான வேலையாக அம்பேத்கர் இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியை பார்ப்பனர்கள் எடுத்துக்கொண்டார்கள்.  அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் புத்தகத்தில் எல்லா அடிப்படைகளை கிழித்தெறிகிறார். அதில், ராமன் அன்றைய அரசர்களில் மிக மிக ஒழுக்கம் கெட்டவன் என்கிறார். பார்ப்பனர்கள் உருவாக்கிய கடவுள்களை பொய்யென்றார். அக்கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யாமல் விட்டுவிட்டோம்.

எல்லோருக்குமான சமூக மாற்றம்தானே வேண்டும். சுரண்டலற்ற, சாதிகளற்ற சமூகத்தை கட்டமைக்க வேண்டுமானால், அதில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

 

நேர்காணல் – சந்துரு மாயவன் 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்