மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள, டோரானா என்ற கிராமத்தில், விஷ்வ இந்து பரிஷித் நடத்திய ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையில், இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், வன்முறை நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்த பிறகும், தெருக்களில் கற்கள் சிதறி கிடப்பதுடன், அந்த கிராமத்தில் இயல்புநிலை திரும்பவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?
‘இந்து சகோதரர்கள் காவி கொடியை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று, விஷ்வ இந்து பரிஷித், சமூக வலைதளம் மூலம் விடுத்த அழைப்பின் பேரில், கடந்த செவ்வாய் கிழமையன்று சுமார் 5000 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான மற்றொரு அழைப்பில், டிசம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தை, மசூதிக்கு வெளியே பாட்டு பாடக் கூடாது என்று தடுத்து நிறுத்திய “அவுரங்கசீப்பின் வாரிசுகளுக்கு பாடம் புகட்டுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்பிரஸ் – யிடம் பேசியுள்ள, அந்த கிராமத்தை சேர்ந்த ஷகீத் ஹூசேன் மன்சூர் என்பவர், பிரச்சனை ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்துகொண்டு, காவல்துறையை அணுகியதாகவும், அதற்கு காவல்துறை தரப்பில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதுடன், இஸ்லாமியர்கள் வீட்டின் வெளியே கட்டியுள்ள தங்கள் கொடிகளை (பச்சை கொடி) அவிழ்த்துவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, இஸ்லாமியர்கள், கொடிகளை அவிழ்த்துவிட்டதுடன், பெண்களை பக்கத்து கிராமங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டிற்கும், உடமைகளுக்கும் ஆண்கள் காவலுக்கு இருந்துள்ளதாகவும் ஷகீத் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்
ஊர்வலம் நடைபெற்ற நாளில், பெரும்பாலும் 15 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சுமார் 5000 பேர், கம்பு, கற்கள் மற்றும் காவிக் கொடியுடன் கிராமத்திற்குள் நுழைந்ததாக தி வயர் கூறுகின்றது.
கிராமத்தை சேர்ந்த ஃபக்கீர் முகம்மது என்பவர் “அவர்கள் வீடுகளை சூறையாடினர். வாகனங்களையும், சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கினர். கால்நடைகளையும் தாக்கினர்” என்று கூறியதுடன் மசூதியின் மேல் ஏறி, காவி கொடியை பறக்கவிட்டதாகவும் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
சிலர், இஸ்லாமியர்களை தாக்குவதற்காக துரத்தியதாக கூறியுள்ள ஃபக்கீர் முகம்மது, தன்னையும் ஒரு கும்பல் பின்தொடர்ந்து வந்ததாகவும், ஒரு இந்து குடும்பம் தனக்கு அடைக்கலம் அளித்து காப்பாற்றியதாக கூறியுள்ளார்.
ஆயுதப்படையில் பணியாற்றும் காவலரான நாசர் முகம்மது, தன்னுடைய வீடும், வாகனமும் தாக்குதலுக்குள்ளானதாகவும், தனது சகோதரரின் கடை தாக்கப்பட்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை, பக்கத்து வீட்டார் தனக்கு அனுப்பி வைத்ததாகவும், தானே ஒரு காவலராக இருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“மசூதிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று காவல்களுக்கு தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மசூதிக்கு எந்த சேதமும் இல்லை. அதன் மீது ஏற்றப்பட்ட கொடி அகற்றப்பட்டுள்ளது” என்று, மாண்ட்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சௌத்ரி தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று, விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் அந்த பகுதியைச் சேர்ந்த தலைவர், ஷோஹன்ஜி விஷ்வகர்மா கூறியுள்ளதாக தி வயர் கூறுகின்றது.
ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வசூல் செய்வதற்காக, அமைதியான வழியில் விழிப்புணர்வு பேரணியை நடத்தியதாகவும், அதில் அடையாளம் தெரியாத சில நபர்கள் காவிக் கொடியுடன் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் விஷ்வகர்மா தெரிவித்துள்ளார்.
ஜன் ஜக்ரான் என்ற பெயரில், மத்திய பிரதேசம் முழுவதும் கடந்த வாரம் பேரணிக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த பேரணியின் போது உஜ்ஜைன், இந்தூர் உட்பட பல்வேறு இடங்களில் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற்றதாக தி வயர் கூறுகின்றது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.