Aran Sei

கிலானியின் உடல் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு – புகாரை மறுத்து காணொளி வெளியிட்ட காவல்துறை

ம்மு காஷ்மீரில் கடந்த வாரம் உயிரிழந்த ஹூரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் உடல் காவல்துறையினரால் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அடக்கம் செய்யப்பட்ட காணொளியைக் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

92 வயதான கிலானி கடந்த வாரம் வியாழக்கிழமை (செப்டம்பர் 2) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை குடும்பத்தினரிடம் கைப்பற்றிய காவல்துறையினர் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த காவல்துறையினர், முதலில் இரவில் அடக்கம் செய்யச் சம்மதம்  தெரிவித்த குடும்பத்தினர், பின்னர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர் என தெரிவித்துள்ளனர்.

கிலானியின் இல்லத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருக்கும் ஹைதர்போரா கல்லறையில், கிலானி உடல் சுத்தம் செய்யப்பட்டு, பிராத்தனைகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என அந்தக் காணொளியில் பதிவாகி இருந்தது.

காஷ்மீர் மண்டல காவல்துறையினர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில், ”முதலில் சம்மதம் தெரிவித்த குடும்பத்தினர், மூன்று மணி நேரம் கழித்து பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் தவறானவர்களின் அழுத்ததின் காரணமாக, வித்தியாசமாக நடந்து கொண்டனர். உடலில் பாகிஸ்தான் கொடியைப் போர்த்தியது, பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியது போன்ற தேசவிரோத செயல்களில் ஈடுபட்டனர்” என பதிவிட்டுள்ளனர்.

கிலானியின் உடல்மீது  அவரது உறவினர் பாகிஸ்தான் கொடியைச் சிலர் போர்த்தியதற்காக, குடும்பத்தினர் மீதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (ஊபா) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“மறைந்தவரின் சடலத்தை மயானத்திற்கு எடுத்த வந்த உறவினர்கள், இண்டிஜாமியா கமிட்டி, உள்ளூர் இமாம் மற்றும் உறுப்பினர்களின் துணையோடு மரியாதையுடன் அடக்கம் செய்தனர். அவரது இரு மகன்களும், மறைந்த தந்தை மீதான அன்பும் மரியாதையும் விட பாகிஸ்தான் மீதான விசுவாசம் பெரிதென கருதி மயானத்திற்கு வர மறுத்துவிட்டனர். “என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு காவல்துறை காணொளிகளை வெளியிட்டது தொடர்பாக சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சடங்குகளை படம்பிடித்தற்காக காவல்துறையினரை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

“நான் பார்த்த காணொளியிலிருந்தும் கிலானி குடும்பத்தினரின் அறிக்கையில் இருந்தும், அவரின் உடலுக்கு சரியான மரியாதை கிட்டப்படாதது துரதிருஷ்டவசமானது” என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

”ஒரு இறந்த மனிதன் கண்ணியமாக நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இறந்த மனிதனின் உடலை வைத்துப் பழிவாங்கும் அரசியலை எங்களால் செய்ய முடியாது. தூக்கிலிப்பட்டும் குற்றவாளிக்கு கூட அவரின் கடைசி விருப்பம் மதிக்கப்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிலானியின் குடும்பத்தினர் மீது ஊபா சட்டத்தில் வழக்கு பதியப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஹுரியத் தலைவர் மிர்வாஸ் உமர் ஃபாருக், ”இந்த வலி மிகவும் பயங்கரமானது. ஒரு குடும்பத்திற்கு அவர்களின் அன்பிற்குரியவரை அடக்கம் செய்யும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுவது மனிததன்மையற்றது. அந்தக் குடும்பம் எப்படி உணர்ந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்” என தெரிவித்துள்ளார்.

Source : NDTV 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்