Aran Sei

உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் – இயக்குனர் வெற்றிமாறன்

credits : cinema express

”அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், கார்ப்பரேட்டுகளின் கூட்டாளிகளாக செயல்படக்கூடாது” என திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா, ஜேமி மார்கன், மீனா ஹாரிஸ், லிசி கங்குஜம், வனேசா நகாடே உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அரசு விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் ரிஹன்னா புகைப்படம் – உண்மைத்தன்மை என்ன?

இதையடுத்து, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா பிரச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது எனும் ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

மேலும், இதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய் குமார், பாடகர் லதா மங்கேஷ்கர் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,  “தங்களின் குரலை எந்த வகையிலும் கேட்க மறுப்பவர்களிடத்தில் மக்கள் தெரிவிக்கும் வடிவமே போராட்டம். நாட்டை ஆளுகின்ற அதிகாரத்தை மக்கள் தான் அரசுக்கு வழங்கியுள்ளனர். அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், கார்ப்பரேட்டுகளின் கூட்டாளிகளாக செயல்படக்கூடாது. விவசாயிகள் இந்த தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம்” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை டாப்ஸி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்