Aran Sei

“மக்கள் பிரதிநிதிக்குக் கிடைக்கும் மருத்துவம், மக்களுக்கும் கிடைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபர்களுக்கு 1 கோடியே இரண்டு லட்ச ரூபாய் மருத்துவ நிவாரண நிதியாகக் கிடைத்துள்ளது என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

“கடந்த நிதியாண்டில் (2019-2020) பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கோரி பொதுமக்களிடம் இருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 40 நபர்களுக்கு ரூ.1,02,50,000(ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) மருத்துவ நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைத்துள்ளது. இன்னும் 34 நபர்களுக்கு நிவாரண நிதி வரவேண்டியுள்ளது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

“இதுவரை பல்வேறு புற்று நோய்களால் பாதிக்கப்பட்ட 36 நபர்களுக்கு 97,75,000 ரூபாயும், இதய அறுவை சிகிச்சை தொடர்பாக 4 நபர்களுக்கு ரூ.4,75,000 நிவாரண நிதியாகவும் கிடைத்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் ஒரு கோடி ரூபாய் பெற்று தருவது என்ற இலக்கோடு செயல்பட்டோம். கொரோனா காலமாதலால் இலக்கை அடைய மூன்றுமாத காலம் கூடுதலாக ஆகியுள்ளது” என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து, சு.வெங்கடேசனை அரண்செய் தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது, “பிரதமர் தேசிய நிவாரண நிதி திட்டம் செயல்படும் மருத்துவமனையில் இருந்து பயனாளிகள் விண்ணப்பம் பெற்றுப் விண்ணப்பிக்க வேண்டும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மக்களைவை உறுப்பினர் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவத்திற்கான கட்டணம் நேரிடையாக மருத்துவமனையிலேயே செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

“புற்றுநோய், இதய அறுவைச் சிகிச்சை போன்ற நோய்களுக்கே நிதி அதிகம் தரப்படுகிறது. ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்” என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.

கொரோனா நோய் தொற்றுக் காரணமாக மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுநலமாகி வந்துள்ள அவரிடம் கொரோனா சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தபோது “மருத்துவமனையின் உள்கட்டமைப்பு சரியாக உள்ளது. மக்கள் பிரதிநிதிக்குக் கிடைக்கும் மருத்துவம், எளிய மக்களுக்கும் கிடைக்கப் பெறவேண்டும். அதை நோக்கி முன்னேறுவதே நாட்டின் வளர்ச்சியாக இருக்கும். மேலும் ஒப்பீட்டளவில் மதுரையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்