Aran Sei

‘பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து, உரிய பதவிகளை வழங்க வேண்டும்’ – வீரப்ப மொய்லி

Image Credits: The Print

தேர்தல் அரசியல் ஆலோசகர்  பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசியிருப்பதாகவும் இதுகுறித்து அவர்கள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள வீரப்ப மொய்லி, “பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர வேண்டும். கட்சிக்கு வெளியே ஒரு ஆலோசகராக மட்டும் அவர் இருக்கக் கூடாது என்பது என் கருத்து. கட்சியில் அவருக்குப் பொருத்தமான பதவியையும் பொறுப்பையும் கொடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

அண்மையில், பெங்களூரில் பிரஷாந்த் கிஷோரும் வீரப்ப மொய்லியும் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் பேசியுள்ளனர்.

பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய பிரஷாந்த் கிஷோர் – அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தலில் இது எதிரொலிக்குமா?

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரைகள் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு பரப்புரை பணிகளைச் செய்து கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் உதவியது.

அண்மைய சட்டபேரவை தேர்தல்களில், தமிழ்நாட்டில் திமுகவிற்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் ஆலோசகர் பணியில் ஈடுபட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். இருகட்சியும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

மேலும், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோரின் தேர்தல் பணியிலும் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்