ஒன்று
சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலையின் ஓராண்டு நிறைவுச் சடங்குபோல நேற்று (ஜூன் 22, 2021) வாழப்பாடி- பாப்புநாய்க்கன்பட்டி முருகேசன் காவல்துறை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். குடித்துவிட்டு ஒரே ‘பைக்கில்’ மூவர் வந்தனர் என்பதற்காக அவரைக் காவல்துறையினர் கடுமையாக அடித்ததை ஒட்டி இந்த இறப்பு நேரிட்டுள்ளது. பக்கத்தில் நின்றவர்கள் நடந்ததை செல்போனில் பதிவு செய்துள்ளனர். ”அடிக்காதீங்க விட்டுடுங்க” எனக் கத்தக் கத்த அவர் தாக்கப்பட்டுள்ளார். சுற்றி நின்றவர்கள் கெஞ்சியும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என ஊடகங்கள் பதிவு செய்கின்றன. காணொளிப் பதிவுகளும் கிடைக்கின்றன.
மனைவி அன்னக்கிளி மற்றும் ஜெயப்பிரியா, ஜெயப்பிரதா என இரு மகள்கள் மற்றும் கவிப்பிரியன் எனும் மகன் உட்பட மூன்று குழந்தைகள் இன்று முருகேசனின் எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளனர். முருகேசனின் குடும்பத்திற்கு இழப்பீடாக உடன் 10 இலட்ச ரூபாய்களைத் தமிழக அரசு கொடுத்துள்ளது. அங்கிருந்த மூன்று காவல்துறையினரில் முருகேசனைக் கொடூரமாகத் தாக்கி அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மட்டும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இப்போது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தின் 327/2021 u/s 176 (1A) (a) எனும் குற்ற எண்ணின்படி, CrPC r/w 302 IPC எனும் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR u/s 154 CrPC) பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சட்டப்பட்டுள்ள காவலர் பெரியசாமி இப்போது சிறையில் ’ரிமாண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் படுகொலை பெரிய அளவில், சொல்லப்போனால் உலகளவில் கண்டிக்கப்பட்டும் இப்படிக் காவல் படுகொலைகள் தொடர்வதை எப்படி விளங்கிக் கொள்வது?
மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்
சாத்தான்குளத்துடன் வாழப்பாடியை ஒப்பிட முடியாது. அது ஒரு விதிவிலக்கு. அமெரிக்காவில் ஜாட்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை தாக்குதலால் கொல்லப்பட்டு உலகளவுச் செய்தியான சூழலில் அது நடந்தது. தவிரவும் கோவிட் பெருந்தொற்றின் பின்னணில் மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகளின் ஊடான காவல்துறை செயல்பாடுகளில் அப்பகுதி வணிகவர்க்கத்தினர் ஏற்கனவே அதிருப்தியுற்றிருந்தனர். வலுவான சமூக ஆதரவும் போராட்டத்திற்கு இருந்தது. கடையைத் திறந்து வைத்திருந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா என்பது எல்லோரது அனுதாபத்திற்கும் அன்று காரணமானது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன. இப்படியான சூழல் இன்று இல்லை.
இரண்டு
பொதுவில் காவல்துறைத் தாக்குதல்கள் மற்றும் என்கவுண்டர் கொலைகளில் தொடக்கத்தில் இருக்கும் ஆதரவும், கோபமும் போகப்போக ஆறிவிடுவதை எங்களின் மனித உரிமைப் பணிகளில் பார்த்துள்ளோம். அதற்குப் பல காரணங்கள்:
1.காவலர்களைக் காவல்துறையும், காவல்துறையை அரசாங்கமும் விட்டுக் கொடுக்காது என மக்கள் நம்புகின்றனர். அதில் உண்மைகள் உண்டு. ஜெயலலிதா தன் ஆட்சியில் காவல்துறையை என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. பரமக்குடியில் ஆறு தேவேந்திரகுல வேளாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டபோது கூட அடுத்துச் சில காலத்தில் காவல்துறைக்கு ஏராளமான சலுகைகளை அவர் அறிவித்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்
2.ஒரு அரசை எதிர்த்து நாம் என்ன செய்துவிட முடியும் எனும் ஒரு அவநம்பிக்கையும் மக்கள் மத்தில் ஏற்பட்டுவிடுகிறது. நடந்தது நடந்துவிட்டது இனி செத்தவன் பிழைத்தா வந்துவிடப் போகிறான் என ஏதோ கிடைத்த இழ்ப்பீடுகளுடன் மக்கள் ஓய்ந்துவிடுகின்றனர். நிறைய எடுத்துக்காடுகளைச் சொல்ல முடியும். திருத்துறைப் பூண்டிக்குப் பக்கத்தில் கீரக்களூர் நங்காளி என்றொரு ஊர். அங்கு சுந்தர் என்பவர் ஒரு டிராக்டர் டிரைவர். அந்த டிராக்டர் காணாமல் போய்விடுகிறது. சுந்தர்மீது குற்றம்சாட்டப்பட்டுக் காவல்துறை விசாரணயில் அவர் இறந்து போகிறார். ஆனால் அவருக்கும் திருட்டுக்கும் தொடர்பில்லை. நாங்கள் ஒரு குழு அமைத்து விசாரித்து அறிக்கை அளித்தோம். பின்னர் நாங்கள் சொன்னது உண்மை என்பது உறுதியானது. மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்த சுந்தரின் உறவினர்கள் முழுமையாக எங்களுக்கு ஒத்துழைத்தனர். எங்கள் அறிக்கை காவல்துறையினரைக் கவலைக்குள்ளாக்கியது. சிலர் எங்களை அணுகவும் முயற்சித்தனர். நாங்கள் வழக்கம்போலத் தவிர்த்தோம். அடுத்த ஓரிரு மாதங்களில் எதுவும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்டவரின் தூரத்து உறவினர் ஒருவரும் எங்கள் குழுவில் இருந்தார். மேற்கொண்டு இது தொடர்பாக ஏதும் கண்டனம், எதிர்ப்பு தெரிவிக்கலாம் என நாங்கள் முயன்றபோது அந்த வீட்டார் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. அவர்களின் அந்த உறவினரையும் கூட அவர்கள் தவிர்த்தனர். இதுதான் மக்களின் பொதுவான நிலை. தொடர்ந்து நின்று எதிர்ப்பது என்பது விதி அல்ல; அது விதிவிலக்கு.
லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்
3. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறுதியாக நின்று எதிர்த்தாலும் வெற்றி பெறுவது கடினம். தொடக்கத்தில் அவர்கள் உறுதியாக நின்றாலும் கடைசிவரை அதைத் தொடரமுடிவதில்லை. சில நேரங்களில் நம் குற்ற நடைமுறை தொடர்பான வழமைகளும் கூட அவர்களுக்கு எதிராக அமைவதுண்டு.சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். நமது சட்டங்களின்படி குற்றம் சாட்டுபவர்களே குற்றத்தை நிறுவ வேண்டும். காவல் துறை வன்முறைகளில் குற்றம் சாட்டுபவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள். குற்றம் சாட்டப்படுபவர்கள் காவல்துறையினர். எனவே காவல்துறைக்கு எதிராகச் சாதாரண மக்கள் குற்றத்தை நிறுவ வேண்டும். இது அத்தனை எளிதல்ல. மிக வலுவான ஒரு போராட்டப் பின்னணி இருந்தால் ஒழிய காவல்துறையை எளிய மக்கள் எதிர்கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக ”உயிராபத்து விளைவிக்கத் தக்க காயங்கள்” (grievous injuries) என்பதைக்கூடப் பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிறுவமுடியாது. வெளிக்காயங்கள் ஏதும் இல்லாமலேயே அடித்துக் கொல்லும் வித்தை எல்லாம் தெரிந்தவர்கள் நம் காவல்துறையினர். எனவே காவல்நிலைய வன்முறையால் நேர்ந்த கொலை என்பதைப் பொருத்தமட்டில் இந்த grievous injuries என்கிற நிபந்தனை நீக்கப்படுதல் வேண்டும்.
4.அதேபோல காவல் நிலைய மரணம் குறித்த புலனாய்வுகளில் (custodial death investigation) காவல்துறையை எதிர்த்து வழக்காட வேண்டும் என்றால் அதற்கு அரசு ஒப்புதல் வேண்டும் (sanction of Government to proceed case against police). இந்தச் சட்ட நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.
தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்
5.அதேபோல (i) சாதி, மதம், இனம் எனும் ஏதொன்றில் சித்திரவதை செய்தவரும், சித்திரவதை செய்யப்பட்டவரும் வேறாக இருக்க வேண்டும் (ii) அச்சுறுத்தல், பாலியல் சகாயம் பெறுதல் ஆகியவற்றுக்காகத் துன்புறுத்தப்பட்டேன் எனவும் ஒருவர் குற்றச்சாட்டுகளை வைக்க முடியாது (iii) குற்றம் நடந்து ஆறுமாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும் – என்கிற நிபந்தனைகளும் நீக்கப்பட வேண்டும்.
மூன்று
அரசுகள் எதுவாக இருந்தபோதும் அவை காவல்துறையின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் கவனமாக உள்ளன. இந்த நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். கைது செய்யப்படும் யாரையும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை டி.கே. பாசு வழக்கில் உச்சநீதி மன்றம் வரையறுத்துள்ளது. எல்லா காவல்நிலையங்களிலும் மூலையில் அது ஒட்டப்பட்டிருக்கும் ஆனால் பயன் ஏதும் இல்லை. விசாரணை செய்யப்படும்போது உறவினர்கள் உடன் இருக்க வேண்டும், கைது செய்யப்படும் நேரம் முதலியன உடன் பதிவு செய்யப்படவேண்டும், கைது செய்யப்படுபவர் மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும், அவரது சட்ட உரிமைகளை அவருக்கு விளக்க வேண்டும், வழக்குரைஞரை அவர் கலந்தாலோசிக்கும் உரிமை கைது செய்யப்பட்டவருக்கு உள்ளது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும், தமது அடையாளங்களைக் கைது செய்யும் அதிகாரிகள் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டும்…. என்பதெல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப் படுகின்றன என்பதே கேள்வி. 24 மணி நேரத்திற்குள் நீதித்துறை நடுவர் (magistrate) முன் நிறுத்துவது என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுப் பலநாட்கள் தங்கள் பிடியிலேயே வைத்திருந்து துன்புறுத்துவது என்பனவெல்லாம் ஊரறிந்த உண்மைகள்.
ஹத்ராஸ் வழக்கு: `இது ஆதித்யநாத்தின் தோல்வியை மூடி மறைக்கும் செயல்’ – மின்னஞ்சல் பிரச்சாரம்
நீதித்துறை நடுவர் முன் நிறுத்தும்போது அவர் கைது செய்யப்பட்டவரை விசாரிக்க வேண்டும். தான் துன்புறுத்தப்பட்டதாக அவர் சொன்னால் அது விசாரித்துப் பதிவு செய்யப்பட வேண்டும். எத்தனை நடுவர்கள் இவற்றைச் சரியாகச் செய்கின்றனர். கடைமையைச் சரியாக ஆற்றும் நடுவர்களே இல்லை என நான் சொல்லவில்லை. காவல்துறைத் தகவல் ஏதும் இல்லாதபோதும் தானே கேள்விப்பட்டுப் போய் பாலியல் வன்முறைக்கு ஆளான பழங்குடிச் சிறுமிகளை விசாரித்து வெளிப்படுத்திய நடுவரையும் நான் அறிவேன். ஆனால் பெரும்பாலான நடுவர்கள் அண்ணாந்து எதிரே நிற்பவரைப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுச் சிறைக்கு அனுப்புவதுதான் வழக்கம்.
இப்படித்தான் காவல்துறைக்கு மட்டும் ”தண்டனை இன்மை” எனும் பாதுகாப்பு” ஒன்று (culture of immunity) இங்கு நிலவுகிறது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
நான்கு
இன்னொரு பக்கம் ’என்கவுண்டர்’ கொலைகளைக் கொண்டாடும் பண்பாடும் இங்கு கொடிக்கட்டிப் பறக்கிறது. ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ களாக வந்து முழக்கிக் கைதட்டல் பெறும் சூரியா போன்ற சினிமாக்காரர்களையும் அதற்குக் கைதட்டும் உளப் பாங்குகளையும் அறிவோம். ‘சிங்கம்’ எனும் திரைப்பட்த்தில் தான் அப்படி என்கவுண்டர் படுகொலைகளைக் கொண்டாடிப் படம் எடுத்ததற்காக ஹரி எனும் திரைப்பட இயக்குனர் சாத்தான் குள வன்முறையை ஒட்டி வருத்தம் தெரிவித்தது கண்ணில்பட்டது சற்று ஆறுதலாக இருந்தது.
2012 -16 காலகட்டத்தில் மட்டும் இங்கு நடந்த காவல் நிலையப் படுகொலைகளின் எண்ணிக்கை (custodial deaths)157. என்று அறியவருகிறோம். 157 உயிர்கள் நம் காவல் நிலையங்களில் பலியாயின! வேறெதிலும் முன்நிற்கிறதோ இல்லையோ காவல் நிலைய மரணங்களில் இந்திய அரசு முன்னிற்கிறது. 1991 – 2009 காலகட்டத்தில் மட்டும் இங்கு நடந்த காவல் நிலையச் சாவுகளின் எண்ணிக்கை 2318. போலி மோதல் படுகொலைகள் 716. இந்தத் தரவுகள் இந்திய மனித உரிமை ஆணையம் அளித்தவை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இதில் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. பதிவில் உள்ளவை மட்டும் இவை. பதிவில் வராமல் போன காவல் நிலையப் படுகொலைகள் எத்தனையோ. நாள்தோறும் 3 அல்லது 4 காவல் நிலையச் சாவுகள் நடக்கின்றன எனவும், அப்படிக் கொல்லப்பட்டோரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அச்சத்தின் விளைவாக இவற்றைப் பேசுவதில்லை எனவும் நீதி அரசர் ஹேமந்த் குமார் ஒருமுறை கூறியது குறிப்பிடத் தக்கது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மறைக்கும் உண்மைகளை வெளிக் கொணர்வதற்கும், சில குற்றங்களை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகவே இங்கு சித்திரவதைகள் ஆகிவிட்டன. கொடுஞ் சித்திரவதைகளுக்கு அஞ்சி காவல்துறையால் சுமத்தப்படும் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.
ஐந்து
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா அவைப் பிரகடனம் (UN Convention Against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) 1984 இல் இயற்றப்பட்டது. இந்திய அரசு அதில் கையொப்பம் இடவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பின் 1997 இல்தான் நிர்ப்பந்தங்களின் விளைவாக அதில் கையொப்பம் இட்டது. அப்போதும் கூட கையொப்பம்தான் இடப்பட்டதே ஒழிய அது அறிந்தேற்பு செய்யப்பட்டு (ratification) நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதாவது அது சட்டமாக்கப்படவில்லை. சட்டமாக்கினால்தான் அது மக்களுக்குப் பயன்படும் என்பதை விளக்க வேண்டியதில்லை. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்வதானால் இப்படிக் கையொப்பம் இட்ட மற்ற நாடுகளில் உள்ள மக்கள் சித்திரவதை முதலானவற்றால் பாதிக்கப்பட்டால் பாதிப்பிற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடமிருந்து இழப்பீடும் பெறலாம்.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
ஆறு
காவல் நிலையச் சாவுகளுக்கு இப்படியான “தண்டனை இன்மைக் கலாச்சாரம்” தான் காரணம். ஒருவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டைக் குற்றம் சாட்டுபவர்கள்தான் நிறுவ வேண்டும் என்பது நீதிவழங்கு நெறிமுறை. காவல் நிலையச் சாவுகளைப் பொருத்தமட்டில் இந்த நிரூபணச் சுமை காவல்துறையிடமே இருக்கவேண்டும். இவன் கொன்றான் என காவல்துறையை எதிர்த்து எளிய மக்கள் வாதிட்டுக் கொண்டிருந்தால் உண்மையை நிறுவ முடியாது. மாறாக காவல்நிலையக் கொலைகள், என்கவுண்டர் கொலைகள் ஆகியவற்றில் கொலைகாரன் தான் கொல்லவில்லை என நிறுவவேண்டும்.
இப்படியான மாற்றங்கள் செய்யப்படாமல் வழமையான கிரிமினல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்வரை சாத்தான் குளங்களும் வாழப்பாடிகளும் தொடரும்.
மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்
”காவல்துறை நண்பர்கள்” (Friends of Police) என்பன போன்ற எடுபிடி அடியாட்படைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
காவல்நிலையச் சாவுகளில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை விசாரிக்க அரசு அனுமதி பெறவேண்டும் என்கிற கொடும்பிரிவுகள் சட்ட நூல்களிலிருந்து பிய்த்தெறியப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாமும் நம் சந்ததியரும் இப்படிப் பலியாகிக் கொண்டே இருக்கத்தான் நேரும்.
(கட்டுரையாளர் அ.மார்க்ஸ் ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.