பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கார்டினல் தியோடார் மெக்கேரிக்கை, நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் பல பதவிகளில் பணியாற்ற அனுமதித்ததை எதிர்த்து, வாடிகன் மீது நான்கு பேர் வழக்குத் தொடுத்துள்ளனர் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ ஜெர்சி உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அங்கு மெக்கேரிக் 1980 களின் பிற்பகுதியிலிருந்து 2000-ம் ஆண்டு வரை பேராயராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக, நியூயார்க் மறைமாவட்டத்தின் பாதிரியாராகவும், மெட்டூசென் மற்றும் நியூ ஜெர்சியின் மறைமாவட்டத்தின் பிஷப்பாகப் பணியாற்றியுள்ளார்.
மெக்கரிக் 2000 ஆம் ஆண்டில், போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் வாஷிங்டன் டி.சி.யின் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ரோமன் கத்தோலிக்க அதிகாரிகளில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவராகவும், திறமையாக நிதி திரட்டுபவராகவும் இருந்துள்ளார். அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டில் மெக்கேரிக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாடிகன் மீதான வழக்கை, திருச்சபையைச் சேர்ந்த மூன்று பேரும், பாதிரியார் ஒருவரும் கொடுத்துள்ளனர். முதல் மூன்று பேர் 80-களில் தங்களுடைய இளமை காலத்தில் தியோடார் மெக்கேரிக்கால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானாதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
மற்றொரு நபரான பாதிரியார், 1990-களில் மெக்கேரிக் தன்னை நியூ ஜெர்சியில் உள்ள ஒரு கடற்கரை வீட்டில் வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தேவாலயத்தின் நன்மை கருதி இதை மறந்துவிடுமாறு சக பாதிரியார் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிரியார்கள் இல்லத்தில் சாதாரண மனிதராக வாழ்ந்து வரும் 90 வயதான மெக்கேரிக் மீது எழுந்த பல பாலியல் குற்றச்சாட்டுகளை வாடிகன் மறைத்துள்ளதாக வாடிகனில் வெளிவந்துள்ள ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
இவர்கள் நான்கு பேரும் “பாலியல் ரீதியான குற்றஞ்சாட்டுக்கு ஆளாகியுள்ள 3000-க்கும் மேற்பட்ட மதகுருக்களின் பெயர்களையும் ஆதாரங்களையும் வாடிகன் வெளியிட வேண்டும்” என தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
போப் இரண்டாம் ஜான் பால், பெனடிக்ட், ஃப்ரான்சிஸ் என அனைவரும் இதைத் திட்டமிட்டு மறைத்துள்ளதாக வழக்குத் தொடுத்திருக்கும் நபர்களின் வழக்கறிஞர் ஜெஃப் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வாடிகன் நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் திருப்பீடம் (ஹோலி சீ), அதன் ஊழியரான மெக்கேரிக் மீது முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தாலும் அவரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அவர் மீது சுமத்தப்பட்டு வந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை மறைத்து வந்துள்ளது என ஆண்டர்சன் கூறியுள்ளார்
சர்வதேச மனித உரிமை சட்டங்களின் மீறல்கள், நுகர்வோர் மோசடி, ஒப்பந்தத்தை மீறுதல் ஆகிய பிரிவுகளில் வாடிகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் போது பாதிரியார்கள் யாரும் வாடிகனின் கீழ் வேலை செய்பவர்கள் இல்லை என அவர்கள் தெரிவித்ததாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஒரு சரியான சட்ட வழிமுறையோடு இந்த வழக்கு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
பிடிஐ யில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.