Aran Sei

பீமா கோரேகான் வழக்கு: மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார் கவிஞர் வரவர ராவ்

விஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் நேற்று (மார்ச் 6) பின்னிரவில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தெலங்கானாவைச் சேர்ந்த  கவிஞர் வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது. அப்போதே அவருக்கு வயது மூப்பு காரணமாக, சில உடல் உபாதைகள் இருந்துள்ளன. பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களுள், வரவர ராவும் ஒருவர்.

கடந்த மே மாதம், அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள மும்பை டலோஜா மத்திய சிறையில், வரவர ராவ் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக ஜேஜே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வரவர ராவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

அதன் பிறகு அவருடைய உடல் நலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என, வரவர ராவ் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனாலும், நீதிமன்றத்தில் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிப்பிரவரி 22 அன்று, வரவர ராவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளுடன் கூடிய ஆறு மாதத்திற்கான பிணையை வழங்கி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வரவர ராவ் மும்பையிலேயே இருக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ஆஜராக வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவுக்கு ஆறு மாதம் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், நேற்று (மார்ச் 6) நள்ளிரவு வரவர ராவின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், “இறுதியில் விடுதலை! 2021 மார்ச் 6, இரவு 11.45 மணி, நானாவதி மருத்துவமனையில் இருந்து வரவர ராவ் விடுதலை செய்யப்பட்டார்.” என்று கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, இன்று (மார்ச் 7) இந்திரா ஜெய்சிங் எழுதிய மற்றொரு ட்வீட்டில், “வரவர ராவ்வின் முகத்தில் கோபம் இல்லை, கசப்பு இல்லை, வெறுப்பு இல்லை. நானாவதி மருத்துவமனையில் இருந்து மருத்துவ பிணையில் விடுதலை செய்யப்பட்ட தருணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்