வால்மீகியை தாலிபான்களுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் முனாவர் ரானா மீதான வழக்கில் அவரை கைது செய்ய தடைவிதிக்க இயலாது என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தெரிவித்துள்ளது..
மேலும் , “இந்த விவகாரத்தில் எந்தத் தயக்கமும் தேவையில்லை, போய் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யுங்கள்,” என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்ற அமர்வு, வழக்கின் தன்மைக் கருதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
தாலிபான்களை வால்மீகியோடு ஒப்பிட்டு பேசியதால் இந்துக்களின் மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறி பி.எல்.பார்தி என்பவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளது.
மேலும், தாலிபான்களை வால்மீகியோடு ஒப்பிட்டதால் இந்துக்கள் மற்றும் பட்டியிலின மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறி இருந்தார் .
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ரானா, “வால்மீகி முதலில் கொள்ளைக்காரனாக இருந்தார். ராமாயணம் எழுதியவுடன் அவர் கடவுளானார். மனிதனின் குணம் மாறக்கூடியது. இதேபோன்று தான் தாலிபான்கள் தற்போது வன்முறையாளர்களாக உள்ளனர். ஆனால், அவர்களின் குணம் மாறக்கூடியது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பி.எல்.பார்தி அளித்த புகாரின் அடிப்படையில் லுக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் பிரிவு 153 ஏ, 295 ஏ, 505(1)(பி) , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கவிஞர் முனாவர் ரானா மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது.
source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.