Aran Sei

‘ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்’ – இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு வைகோ கடிதம்

மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ  கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 27) இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கு, மின்னஞ்சல் வழியாக, ‘ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்’ என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,“பாஜக தலைமையில் ஆளுகின்ற மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு அதை எதிர்க்கின்றது. அதற்கான காரணங்களைத் தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.” என்று குறிப்பிட்டு, 19 காரணங்களை வைகோ பட்டியலிட்டுள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

அக்கடிதத்தில், “இந்திய விடுதலையின்போது, கல்வி என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் அரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. அப்போது, தமிழ்நாடு தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தி வந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் முடிவை, காங்கிரஸ் முதல்வர்கள் எதிர்க்கவில்லை. எனவே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கொண்டனர்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

“அதன்பிறகு அமைந்த மத்திய அரசுகளும், கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வந்தன. மாநில மொழிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதனால், காலப்போக்கில் மாநில மொழிகள் படிப்படியாக அழிந்துவிடும். பல ஆயிரம் ஆண்டுகளாக மாநில மக்கள் கடைப்பிடித்து வருகின்ற பண்பாடு, பழக்க வழக்கங்களை, இந்தி மொழித் திணிப்பு அழித்துவிடும்.” என்று வைகோ அக்கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

மேலும், இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்ற, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் குழுக்கள் இயக்கி வருகின்ற, பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைகுறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு, அன்புடன் வேண்டுகின்றேன் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ  கடிதம் மூலம்  தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்