Aran Sei

பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: மதவாத பாசிசத்தை எதிர்பவர்களை ஒடுக்கும் பாஜகவுக்கு கிடைத்த சவுக்கடி என வைகோ கருத்து

தவாதப் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக சட்டத்தை ஏவி, ஒடுக்க நினைக்கும் பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கின் மூலம் சவுக்கடி தந்திருக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக,  இன்று (ஜூன் 7), வைகோ வெளியிட்ட அறிக்கையில், “இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, யூ டியூப் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பாஜக அரசின் மீதான தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மரணங்களைக் கூட வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.” என்று நினைவூட்டியுள்ளார்.

மோடியை விமர்சித்ததாக தேசத்துரோக புகார் அளித்த பாஜகவினர் – புகாரை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

“2020 மார்ச் 30 ஆம் தேதி ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி குறித்து பாஜகவைச் சேர்ந்த அஜய் ஷியாம் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் இமாச்சாலப் பிரதேச காவல்துறை, பத்திரிகையாளர் வினோத் துவா மீது தேசத்துரோக பிரிவு 124ஏஇன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் பிரிவு 268, பிரிவு 501 மற்றும் பிரிவு 505 ஆகியவற்றின் கீழும் வழக்குப் போடப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை எதிர்த்து வினோத் துவா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கில் 2020 ஜூலை 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வினோத் துவா மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.” என்று அவர் அவ்வழக்கை விளக்கியுள்ளார்.

“தற்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் யூ.யூ.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கு மற்றும் அவதூறு வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. அரசின் செயல்பாடுகள் பற்றிய பத்திரிகையாளரின் விமர்சனங்கள் தேசத்துரோகம் என்று சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறுதியிட்டுக் கூறி இருக்கும் உச்ச நீதிமன்றம், 1962இல் வெளிவந்த கேதார்நாத் சிங் எதிர் பிஹார் அரசு வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளது.” என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

“உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் யூ.யூ.லலித், வினீத் சரண் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து உண்மை நிலையைக் கண்டறிய 2020 அக்டோபர் 5 ஆம் தேதி, அங்கு செல்ல முயன்ற டெல்லியின் மலையாள செய்தி இணையதள செய்தியாளர் சித்திக் காப்பான், உ.பி. மாநிலக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற அதிக் உர்ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மீது தேசத்துரோக சட்டப் பிரிவு 124ஏ மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்ம் ‘ஊபா’ ஆகியவற்றின் கீழ் யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில், பீமாகோரேகான் வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) மூலம் புனையப்பட்ட பொய்வழக்கில் 2018இல் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருண் பெரைரா, வழக்கறிஞர் சுதாபரத்வாஜ், புரட்சிகர எழுத்தாளர் கவிஞர் வரவரராவ் மற்றும் வெர்னான் கன்சால்வேஸ், பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா மற்றும் கல்வியாளர் ஆனந்த் தெல்டும்டே உள்ளிட்ட 16 பேர் குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

“இதில் கவிஞர் வரவரராவ் உடல்நலிவுற்ற நிலையில் தற்காலிக பிணை விடுதலை பெற்றுள்ளார். பீமாகோரேகான் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டான்சுவாமி பார்கின்சன் நோய் மற்றும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர். நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் தனது 84 வயதில் கொடும் சித்ரவதையை அனுபவித்து வரும் ஸ்டான் சுவாமிக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

“மதவாதப் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக சட்டத்தை ஏவி, ஒடுக்க நினைக்கும் பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கின் மூலம் சவுக்கடி தந்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொய் வழக்குப் புனையப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அறிவுத் துறையினர் அனைவரையும் ஒன்றிய அரசு விடுதலை செய்ய வேண்டும்.” என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்