Aran Sei

பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணி: ’ஆர்.எஸ்.எஸ்ஸின் குறிக்கோள்களை நிறைவேற்றும் தமிழக அரசு’ – வைகோ குற்றச்சாட்டு

தவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது அநீதியானது என்றும் சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும்செட் தேர்வு (State Eligibility Test -SET)’ மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும்நெட் தேர்வு (National Eligibility Test – NET)’ ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதலின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செட் மற்றும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பிஎச்.டி ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்கள் மூலமாக நடத்தி வந்த செட் தகுதித் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை என்று கூறியுள்ள வைகோ, இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பிஎச்.டி ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று, தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக வைகோ கூறியுள்ளார்.

“பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயித்துள்ள விதிகளின் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை கூறி இருக்கின்றது. முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன்பின்னர் செட், நெட் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெறப் போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கூடாது – பரிந்துரைக்கு எதிராக களமிறங்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

ஏழை கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு, அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான் என்றும், அதற்குப் பொருளாதாரச் சூழலும் இடம் தராது என்றும் அவர் கூறியுள்ளார்.

எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைவாய்ப்புத் தேடி நகர வேண்டிய சூழலில் இருக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத்தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்ற கனவு எவ்வாறு மெய்பட்டது? – கியான் ப்ரகாஷ்

“இந்நிலையில், பி.எச்.டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி இன மாணவர்கள் உயர்கல்வித் துறைக்கு பணி வாய்ப்புப் பெற்று வந்துவிடக்கூடாது என்ற வன்மம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சனாதனக் கூட்டத்தின் குறிக்கோள்களை, தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது பாஜக அரசு.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

அதன் அடிப்படையில்தான் யுஜிசி, சமூக நீதிக்கு எதிரான இத்தகைய விதிமுறைகளை வகுத்திருக்கின்றது என்றும் அதையே காரணம் காட்டி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது என்றும் வைகோ சாடியுள்ளார்.

`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளித்திருப்பதைப் பெரும் சாதனையாக பறைசாற்றி பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்?” என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்