மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களை, அரசின் பல்வேறு துறைகளில், சிக்கலான காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் (இணைச் செயலாளர், இயக்குநர்) நியமிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூகநீதிக்கு சாவுமணியாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திகார் சிறையிலும் குலையாத விவசாயிகளின் போராட்ட உறுதி – பத்திரிகையாளர் மன்தீப் புனியா
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய்த்துறை மற்றும் மத்திய நிதித்துறை, வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, வான் ஊர்திப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களாகத் தனியார் துறையிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 315 -இன்படி பொதுப்பணித் தேர்வு ஆணையம் (Public Service Commission) அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே மத்திய அரசுப் பணிகள் மற்றும் மாநில அரசுப் பணிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கியப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்ற முதன்மைப் பணிகளுக்கு அந்தந்தத் தேர்வு ஆணையங்கள் தனியே தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி, அதன்பின்னர் பயிற்சி அளித்து, மத்திய அரசுப் பணிகளுக்குச் சேர்க்கப்படுவர். பின்னர் மத்திய அரசின் துணைச் செயலாளர்கள் தொடங்கி பல அரசுத் துறைச் செயலாளர்கள் எனப் பதவி உயர்வு பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“குற்றம் சுமத்துவதற்காவது நான் பயன்படுகிறேன் என்பதில் மகிழ்ச்சியே” – பிரதமர் நரேந்திர மோடி
“மத்தியப் பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி பின்பற்றப்படுகின்றது என்றும் இதனால் மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயலகப் பணி இடங்களில், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 23 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
‘மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3-4 தொழிலதிபர்கள்தான் கடவுள்’ – ராகுல் காந்தி விமர்சனம்
”மத்திய பா.ஜ.க. அரசு, சமூக நீதிக்கு முடிவு கட்டும் வகையில், அரசு அமைப்புச் சட்டம் அளிக்கும் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாகப் பிறப்பித்து வருகின்றது. மத்திய அரசின் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள் குழாமைச் சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்திட பா.ஜ.க. அரசு முனைந்து வருகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பு ஆணையை உடனே இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.