Aran Sei

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியிடத்திற்கான தேர்வு: தமிழ்நாட்டில் மையம் அமைக்க வைகோ கோரிக்கை

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணி இடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு மையம் கூட அமைக்கப்படவில்லை என்றும், அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 22), நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை வைகோ சந்தித்துள்ளார். அப்போது, அவர் விடுத்த கோரிக்கை, “திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை, ஜூலை 23 முதல் 31 வரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தின் மதுரைக் கோட்டமும், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்ளே இடம்பெறுகின்றது. கேரள மாநிலத்தில், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில், மதுரைக் கோட்டத்துக்கு உள்ளே ஒரேயொரு மையம் கூட இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

‘தோனி, பி.டி.உஷாகளை உருவாக்கிய ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதீர்’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்

“எனவே, தமிழக இளைஞர்கள், தேர்வுகளை எழுதுவற்காகக் கேரளத்துக்குச் சென்று, ஒரு வாரம் வரையிலும், விடுதிகளில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் கொரோனா தொற்று இன்னமும் கடுமையாகத் தாக்கிக் கொண்டு இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, இது தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்குக்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

“அதன் முதல் கட்டமாக, நாளை (ஜூலை 23) தொடங்க இருக்கின்ற இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்; அடுத்தகட்டமாக, தமிழகத்தில், தனிமனித இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போதுமான தேர்வு மையங்கள் அமைப்பதுடன், படித்து வேலை இல்லாமல் இருக்கின்ற, தமிழகத்தின் தகுதி உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சம நீதி கிடைத்திட ஆவண செய்ய வேண்டும்.” என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்