Aran Sei

கல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு

திர்வீச்சைக் காரணம் காட்டி, கல்பாக்கம் பகுதி மக்களை நிலம் அற்றவர்களாக மாற்றி, உள்நாட்டு அகதிகளாக வெளியேற்ற மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (பிப்ரவரி 28) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நில கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை, செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலருக்கு அனுப்பி உள்ளார்.” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

’குஜராத்துக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டிற்கு ஒரு நீதி: தென்னிந்தியாவை துயரத்தில் ஆழ்த்தும் கூடங்குளம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

அந்த அரசாணையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர காலத்தில் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் இணைந்து, கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள, உலகப் புராதனச் சின்னமாக ஐநா மன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும், புகழ் வாய்ந்த, பல்லவர்களின் மாமல்லபுரம், டச்சுக்காரர்களின் பழமையான துறைமுகமாக திகழ்ந்த சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம், ஆகிய 14 க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

“இது மக்கள் ஆட்சிக்கு எதிரான சர்வாதிகாரம் ஆகும். உயிர்களைப் பலிகொடுத்து விட்டு, கல்லறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் அணு உலைகள் தேவையில்லை. அதை இழுத்து மூட வேண்டும். இந்த அரசு ஆணையின் காரணமாக, கதிர்வீச்சைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்களை நிலமற்றவர்களாக மாற்றி, உள்நாட்டு அகதிகளாக வெளியேற்ற மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.” என்று வைகோ கூறியுள்ளார்.

மேலும், “அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் மக்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஆக அணு உலைகள் பேராபத்து என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே, மக்கள் சக்தியும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடி இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணைநிற்கும்.” என்று தன் அறிக்கையில் வைகோ உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்