Aran Sei

‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்

credits : indian express

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால் மக்கள் முதலைகளாக மாறும் வாய்ப்புள்ளது என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். ஃபைசர் மற்றும் பைஆன்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள போல்சனாரோ இவ்வாறு கூறியுள்ளார்.

தீவிர வலதுசாரியான போல்சனாரோ, தொடக்கம் முதலே கொரோனா பெருந்தொற்று குறித்து முரணான கருத்துகளை தெரிவித்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில், கொரோனா ஒரு சாதார காய்ச்சல் என்று குறிப்பிட்ட போல்சனாரோ, முகக்கவசம் அணிய மறுத்ததுடன் மக்களையும் அதற்கு ஊக்குவித்தார்.

போல்சனாரோவைப் போலவே, தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டிரம்பும் கொரோனா குறித்து இதேபோன்ற கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், பிரேசில் மக்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கும் மிகப்பெரிய திட்டத்தை துவங்கி வைத்த போல்சனாரோ, தான் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

“நீங்கள் முதலைகளாக மாறினால் அது உங்களுடைய பிரச்சனை. ஃபைசர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது: ‘பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’” என்று போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

“நீங்கள் சூப்பர் மேனாக மாறினாலோ, பெண்களுக்கு தாடி வளரத் தொடங்கினாலோ, ஆண்கள் பெண்களைப்போல பேசத் தொடங்கினாலோ, அதற்கு அவர்கள் பொறுப்பல்ல” என்று, தடுப்பு மருந்து நிறுவனங்களை குறிப்பிட்டு போல்சனாரோ கருத்து தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று தடுப்பு மருந்து திட்டத்தை தொடங்கி வைத்த போல்சனாரோ, அது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆனால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அதேநேரம், வற்புறுத்தி தடுப்பு மருந்தை கொடுக்க கூடாது என்றும் பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம், அவர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு வரக்கூடாது என்று தடைவிதிக்கலாம். ஆனால், தடுப்பு மருந்தை எடுக்கச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதே இதற்கு அர்த்தம் என்று ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 71 லட்சம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,85,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்