Aran Sei

‘கோவாக்சின்’ எடுத்துக்கொண்டவர் மரணம் – தடுப்பு மருந்து காரணமில்லை என்று பாரத் பயோடெக் விளக்கம்

சோதனைக்காக தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர் உயிரிழந்ததற்கும், தடுப்பு மருந்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 42 வயதுடைய நபர், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையில் தன்னை உட்படுத்துக்கொண்டுள்ளார். தற்போது அவர் உயிரிழந்துள்ள நிலையில், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டதால் அவர் உயிரிழக்கவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் – அறிவியல் முறை பின்பற்றப்பட்டதா?

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகு அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும், 7 நாட்கள் கடந்த பிறகும் அவருக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விஷம் அருந்தியதால், சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்துள்ளதாக கூறியுள்ள பாரத் பயோடெக், முதல் கட்ட விசாரணையில், தடுப்பு மருந்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

“மருந்து பரிசோதனையின் போது எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற பல காரணங்கள் உள்ளன. மருந்தை எடுத்துக்கொண்டவருக்கு வெளியில் தெரியாத நோய் அல்லது நாள்பட்ட நோயாக இருக்கலாம் அல்லது திடீரென்று ஏற்படும் விபத்துபோன்று எதுவாலும் நிகழலாம்” என்று தெரிவித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்

அதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால், சட்டப்படி, மத்திய மருந்து கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம் இந்த நிகழ்வில் அந்த விதி பின்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட தீவிர பக்கவிளைவுகளை ஆராய்ந்ததாகவும், ஆனால் அது, தடுப்பு மருந்தின் விளைவாக ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு?

இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே, அதற்கு அவசர அனுமதி வழங்கியது ஏன்? என்று, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி உட்பட பலர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்