Aran Sei

சாதியப் பாகுபாட்டால் பணிநீக்கம் செய்யப்பட்ட சமையல்காரர் – எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் புகாரளித்ததால் மீண்டும் வேலை கொடுத்த அதிகாரிகள்

த்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் உடனேயே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்று சம்பாவத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அரசுப் பள்ளியில் 6 – 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 43 மாணவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சமையல்காரர் சுனிதா தேவி சமைத்த மதிய உணவைச் சாப்பிட மறுத்துள்ளனர். அதனால் சுனிதா தேவி டிசம்பர் 20 ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சுனிதா தேவிக்கு பதிலாக வேலைக்கு சேர்ந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் சமைத்த மதிய உணவை அப்பள்ளியில் உள்ள 21 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர்.

கொரோனாவைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அறிவியல் பூர்வமானது இல்லை – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்

சாதியின் காரணத்திற்காக சுனிதா தேவி பணிநீக்கம் செய்யப்படவில்லை. மாறாக அவரது பணி நியமனத்தில் உள்ள நடைமுறைக் குறைபாடுகளால் தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பாவத் மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி புரோஹித் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது முறையான நடைமுறைக்குப் பிறகு ஜனவரி 16 ஆம் தேதி முதல் அவர் மீண்டும் அப்பள்ளியில் தனது பணியைத் தொடங்குவார் என்று சம்பாவத் மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி புரோஹித் தெரிவித்துள்ளார்.

“தன்னை மீண்டும் பணியில் அமர்த்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த முறை என்னுடைய வேலையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்று சுனிதா தேவி கூறியுள்ளார்,

ஆதிக்கச் சாதி மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தப் பள்ளியில், பொதுப்பிரிவைச் சேராத சமையல்காரருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று விதிகள் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாகப் பட்டியல் சாதி சமையல்காரர் இப்பள்ளியில் நியமிக்கப்பட்டதே இல்லை என்று பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அப்பள்ளியின் முதல்வர் பிரேம் சிங் கூறியுள்ளார்.

ஹரித்வாரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – பிரதமர், குடியரசுத் தலைவருக்கு முன்னாள் படைத் தளபதிகள் கடிதம்

அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வு பெருமளவில் இருப்பதாகவும், அவர்கள் தங்களது பெற்றோரிடம் இருந்து இதனைக் கற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால் அவர்களுக்கு இதைப் புரிய வைப்பது எங்களுக்கு அவ்வளவு எளிதல்ல என்று சம்பாவத் மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி புரோஹித் ஒப்புக்கொண்டுள்ளார்.

நான் சமைத்த மதிய உணவை உண்பது எங்களுக்கு அவமரியாதை என்று ஆதிக்கச் சாதி மாணவர்கள் சொன்னதுடன் அந்த உணவை உண்ணாமல் அவர்கள் புறக்கணித்தனர். மேலும் சில மாணவர்கள் மற்ற மாணவர்களையும் உணவை புறக்கணிக்க அறிவுறுத்தினார்கள். குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தரப்பட்டதோ அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளிலேயே மாணவர்களின் பெற்றோர்கள் உட்படக் கிராம மக்கள் பலரும் பள்ளியின் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். இது பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக சுனிதா தேவி கூறினார்.
.
என்னை விட, என் 2 மகன்களுக்காகத்தான் நான் அதிகம் வேதனைப்படுவதாகவும், இதுவரை சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பெரியளவில் அறியாத அவர்கள் இப்போது, ​​​​என் அவமானத்திற்குப் பிறகு, அதைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்வை அவர்கள் மிக மோசமாக உணர்ந்திருப்பார்கள் என்று சுனிதா தேவி கூறியுள்ளார்.

Source : indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்