உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகக் காட்டும் காணொளி கடும் கண்டனத்தை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக, மாநில காவல்துறை நேற்று(டிசம்பர் 23) மாலை வழக்கு பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற தர்ம நாடாளுமன்றம்(தர்ம சன்சத்) நிகழ்ச்சியில் பல இந்து மத சாமியார்கள் கண்டனத்திற்குரிய வகையில் பேசியுள்ளதோடு, சிறுபான்மை சமூகத்தினரை கொலை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய்யும் ஹரித்வாரைச் சேர்ந்த குல்பஹர் கான் என்பவரும் ஹரித்வாரில் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது இந்துத்துவாவினர் தொடர் தாக்குதல் – நடவடிக்கை எடுக்குமா பாஜக அரசு?
அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஹரித்வார் காவல்துறை கூறியுள்ளது.
இந்த வழக்கு ஐபிசி பிரிவு 153அ (மதம், இனம், இடம், பிறப்பு, வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்பவர், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஒரு கோவிலின் தலைமை அர்ச்சகராக உள்ளார். இவர்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிகழ்வில், இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் செய்ய அழைப்பு விடுத்துள்ள யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, 2029-ல் ஒரு இஸ்லாமியர் பிரதமராக வருவதைத் தடுக்க இந்துக்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“வலிமையான ஆயுதங்களுடன் யுத்தத்திற்கு வருபவர்கள் வெல்வார்கள். சாஷ்ட்ரமேவ ஜெயதே (ஆயுதங்கள் வெல்லட்டும்). நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம். தேவைப்பட்டால், அதற்காக கொலையும் செய்வோம்” என்று கூறி, பார்வையாளர்களை உறுதிமொழி எடுக்க கோரியுள்ளார்.
அதே நிகழ்வில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பேசியுள்ள பாட்னாவைச் சேர்ந்த சாமியாரான தரம்தாஸ் மகராஜ், “நான் துப்பாக்கி வைத்துள்ள எம்பியாக நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டும். நாதுராம் கோட்சேவாகி, ஆறு தோட்டாக்களையும் அவருக்குள் சுட்டு இறக்கியிருப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு சாமியார்கள் தெரிவித்துள்ளனர். ஹரித்வார் மக்களும் உணவகங்களும் கிறிஸ்துமஸைக் கொண்டாடினால், ‘அவர்களின் சொத்துக்களுக்கு அவர்களே பொறுப்பு’ என்று ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் சாமியார் ஒருவர் மறைமுக எச்சரித்துள்ளார்.
“1857 கிளர்ச்சியை விட மிக பயங்கரமான போரை நீங்கள் காண வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், சட்டம் ஒழுங்கை காப்பதாக உணவக உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
டிசம்பர் 19ஆம் தேதி, இந்து யுவ வாஹினி என்ற இந்து அமைப்பின் டெல்லி பிரிவு ஏற்பாடு செய்திருந்த மற்றொரு நிகழ்வில், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்குவதற்கு, போரிடுவோம், உயிர்கொடுப்போம், தேவைப்பட்டால், கொலையும் செய்வோம் போன்ற உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.