கொரோனா தொற்று மருந்துகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தியதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகண்ட் பிரிவு, அம்மாநில காவல்துறையின் தலைமை இயக்குநரிடம் புகார் கடிதத்தை அளித்துள்ளது.
ஜூன் 23 ஆம் தேதியிட்ட, பத்து பக்க கடிதத்தில், “தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று ராம்தேவ் பகிரங்கமாக அறிவித்தது, அவரும் அவருடன் இருந்த மற்றவர்களும் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கு தங்களுக்கு முன் ஒன்றுமே இல்லை என்பதை நிரூபித்ததற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்தேவ்வும் அவரது உதவியாளர் பால்கிருஷ்ணா உட்பட பதஞ்சலி யோக்பீத்தை சேர்ந்த அனைவரும் எப்படி எல்லாம் சட்டமீறல்களை செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டதோடு, அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று காவல்துறையின் தலைமை இயக்குநரிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரியுள்ளது.
‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்
அண்மையில், பாபா ராம்தேவ் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அதில், “அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். ரெம்டெசிவிர், ஃபாவிஃப்லு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் தோல்வியுற்றது.” என்று ராம்தேவ் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மே 26 ஆம் தேதி, அல்லோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள்குறித்து ராம்தேவ் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாபா ராம்தேவ் வெளியிட்ட காணொளி ஒன்றில், “என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது, அவர்கள் வெறுமனே கூச்சலிடுகிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும்.” என்று எச்சரித்திருந்தார்.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.