பெண்கள் அணியும் கிழிந்த மாடல் ஜீன்ஸ் குறித்த தனது கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பாஜகவை சேர்ந்த உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தனக்கு ஜீன்ஸ் மீது எந்த விமர்சனமும் இல்லை என்றும் ஆனால் கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிவது தவறுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 16 ஆம் தேதி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கம் ஒன்றில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, தனது விமான பயணத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரித்த முதல்வர் ராவத், இரண்டு குழந்தைகளையுடைய ஒரு பெண் கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருப்பதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியிருந்தார்.
மேலும், அப்பெண்ணால் எப்படியொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இவர்களைப் போன்ற ஒரு பெண் தனது குழந்தைகளுக்கும் இச்சமூகத்திற்கும் என்ன மாதிரியான செய்தியை அளிப்பார்கள் என்று ஆச்சரியமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ராவத்தின் கருத்தை விமர்சித்து, டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் #rippedjeans என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர் ராவத், “இப்போதெல்லாம் குழந்தைகள் விலை உயர்ந்த ஜீன்ஸ்ஸுகளை வீட்டிற்கு கொண்டு வந்து, கத்தரிக்கோலால் அதைக் கிழிப்பது குறித்துதான் நான் கருத்து தெரிவித்தேன். நான் வீடுகளில் உள்ள அச்சூழலைப் பற்றி மட்டுமே பேசினேன். என் கருத்தானது எனக்கும் பொருந்தும். என் கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தார் மன்னித்துக்கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “குழந்தைகளிடத்தில் நாம் நன்மதிப்புகளையும் ஒழுக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நன்மதிப்புகள் எதிர்காலத்தில் ஒருபோதும் தோல்வியைத் தழுவாது. குழந்தைகளைப் போதைப்பொருள் போன்ற தீயச் செயல்களிலிருந்து விலக்கி வைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.” என்று முதல்வர் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை ஒரு கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர் என்று கூறும் ராவத், தன்னுடைய பேன்ட் கிழிந்த போதெல்லாம், பள்ளிக்கூடத்தில் தனது ஆசிரியர் தன்னைத் திட்டுவார் என்றும் ஒழுக்கம் மற்றும் நன்மதிப்புகளின் காரணமாக, நாங்கள் அக்கிழிந்த பேன்ட்டை ஒட்டுப்போட்டு தைத்து பயன்படுத்தினோம் என்றும் கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.