தமிழக அரசின் தவறானக் கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் சீர்குலைக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்துக்கு, பாதுகாப்பு என அடிப்படை தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் தனிச்சிறப்பான திட்டத்தை அறிவித்து உடனே செயல்படுத்த வேண்டும்.
பெரும்பாக்கத்தில் மேலும் மக்களைக் குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும்.
பட்டினப்பாக்கம் – கடலோரம் உள்ள நிலங்களை மீனவர்களுக்கான குடியிருப்புகளுக்கு ஒதுக்க வேண்டும்! பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ள ‘மெரினா தொழிற்பூங்கா’ திட்டத்தை கைவிடவேண்டும்!
பின்வரும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு நகர்ப்புற குடியிருப்பு – நிலஉரிமை தொடர்பாக தமிழக அரசு கொள்கை வகுத்திட வேண்டும் :
(கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு ‘குடியிருப்பு கொள்கை’ க்கான அறிக்கை வெளியிட்டது, இந்த கொள்கையை தற்போதைய திமுக அரசு மாற்றியமைக்க குழு நியமித்துள்ளது)
1. தமிழக மக்களுக்கானக் குடியிருப்பு கொள்கையை உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இக்கொள்கையை தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் முற்போக்கு இயக்கங்களும் மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையான விவாதத்தின் அடிப்படையில் இறுதிப்படுத்த வேண்டும்.
2. சென்னை நகரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் வழித்தடத்தின் இன்றைய நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். நீர்நிலைகளுக்கான சுவடுகளே இல்லாத ‘கொளத்தூர் அவ்வை நகர்’ போன்ற பகுதிகளை ‘நீர்நிலை’ என்று சொல்லி வீடுகளை இடிக்காதே!
3. தமிழக அரசின் ‘வரைவு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக் கொள்கையில்’, வீடுகள் அப்புறப்படுத்தப்படும்பொழுது மறுகுடியமர்வு அவ்விடத்தில் இருந்து 5 கீ.மி சுற்றளவிற்குள் செய்யப்படும் என்று திருத்தம் செய்ய வேண்டும்.
4. சென்னை நகரத்தில் உள்ள காலிப் புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை உழைக்கும் மக்களின் குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.
5. எந்த ஒரு TNHUDB குடியிருப்புகளும் இடித்து புதிதாக கட்டப்படும் காலம் வரை முறையான ‘தற்காலிக மாற்றுக்குடியிருப்பு’ வழங்கவேண்டும். அனைத்து பிளாக்குகளையும் ஒரேநேரத்தில் இடிக்காமல் பகுதிபகுதியாக இடித்து கட்ட வேண்டும்.
6. கே.பி பார்க் போன்று பன்னடுக்கு மாடிகளை (10,12,14 மாடிகள்) கட்டக் கூடாது. மக்கள்தொகை அடர்த்தியை (Population Density) அதிகரிக்கக் கூடாது. Stilt + 4 தளம் என்பதை அமல்படுத்த வேண்டும்.
7. ஏழை,எளிய மக்கள் வசிக்கும் வீடுகள் தரமற்று கட்டப்படுவதும் சில ஆண்டுகள் கடந்த பின்பு வீடுகள் தானாக இடிந்து விழுவதையும் காண்கிறோம். எனவே முறையான ஆய்வுசெய்து தரமான கட்டிடம் கட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேற்பார்வைக் குழு அமைக்க வேண்டும்.
8. ’நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ என்று சொல்லி பராமரிப்புப் பணிகளை மக்கள்மீது திணிக்காமல் TNHUDB யே செய்ய வேண்டும்.
9. TNHUDB குடியிருப்புகளில் வாழும் மக்கள் ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்புமீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று நகர்ப்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.