Aran Sei

உ.பி. வரும் இலங்கை அதிபரை அனுமதிக்கக் கூடாது – ஒன்றிய அரசுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வேண்டுகோள்

லங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே வருகின்ற அக்டோபர் 20 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பன்னாட்டு விமான முனையத்தை திறக்க வருவதாக செய்திகள் வந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைக்க கூடாது என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர். மணி  விடுத்த அறிக்கையில் “கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட வேண்டிய இனக்கொலை இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் கோத்தபய இராசபக்சே வருகின்ற அக்டோபர் 20 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாக செய்திகள் வருகின்றன. கெளதம புத்தர் முத்தி அடைந்த திருத்தலம் என்று நம்பப்படும் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் திறப்பு விழாவுக்கு அவர் வருகிறார். அப்போது அவர் தலைமை அமைச்சர் மோடியை சந்திக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்களுக்காக பன்னாட்டுப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2013 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே, இலங்கை மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போது தமிழ்நாடு அரசின் சார்பாக ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்பட்டது. இலங்கையை அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளத்தில் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆயினும் இந்திய அரசு இந்நாள்வரை இதற்குச் செவிமடுக்கவில்லை, தமிழினத்தை அழிக்கும் இலங்கையுடன் நட்புப் பாராட்டியே வருகிறது.
இதற்கிடையே கடந்த மாத இறுதியில் ஐ.நா. பொது அவைக் கூட்டத்திற்காக நியூயார்க் சென்ற கோத்தபய இராசபக்சே காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் தருவதை விரைவுப்படுத்துவதாக தெரிவித்தார். அதாவது காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை என்பதே அதன் பொருளாகும். சுமார் 18,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்ற நிலையில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் ஆவர். புதுவை இரத்தினதுரை, யோகி, பேபிசுப்பிரமணியம், பாலகுமாரன் போன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புகழ்பெற்ற முன்னோடிகள் இப்படி கையளிக்கப்பட்டவர்கள் ஆவர். சுமார் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அப்போது கையளிக்கப்பட்டிருந்தனர்.
அக்காலத்தில் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தவர் இப்போதைய அதிபர் கோத்தபய. கையளிக்கப்பட்டோரை உயிருடன் பாதுகாத்து இருக்க வேண்டிய பொறுப்புடையவர் கோத்தபய. ஆகவே, அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர் பொறுப்புக்கூற வேண்டியவராகிறார்.
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிசேல் பசலே 2021 சனவரி 27 நாளிட்ட A/HRC/46/20 அறிக்கையில் இலங்கை நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையில், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை  நிறுத்துவதைத் தவிர பொறுப்புக் கூறலுக்கு வேறு வழியில்லை என்ற முடிவை தெரிவித்தார். கூடவே, அனைத்தளாவிய அல்லது எல்லைக்கடந்த மேலுரிமை அல்லது அதிகார வரம்புக்கான (extraterritorial or universal jurisdiction) கோட்பாடுகளின் அடிப்படையில், உறுப்பரசுகள் தமது நாட்டில் இலங்கையில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்த அனைத்துத் தரப்பினர் மீதும் உள்நாட்டுப் புலனாய்வு செய்ய முடியும் என்றும், மோசமான மாந்தவுரிமை மீறல்களைச் செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான பயணத் தடைகள், சொத்து முடக்கம் குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதியின்பால் அக்கறை கொண்ட நாடுகள் மனிதவுரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சிங்களப் படை அதிகாரிகள், அரசத் தலைவர்கள் மீது அனைத்துலக மேலுரிமையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இன அழிப்புப் போரின்போது இலங்கை அரசின் 58 ஆவது படையணிக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க அரசு பயணத்தடை விதித்துள்ளது என்பது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.
அந்த வகையில், கோத்தபய இராசபக்சேவுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும், அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்ய வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாகும். ஆனால், ஒன்றிய அரசோ அவரை அரசு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புக்குத் துணைப்போவதாகும்; தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு செய்யும் இரண்டகமாகும். ஐ.நா. மனிதவுரிமை ஆணையரின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை தீர்மானங்களுக்கு இணங்க கோத்தபய இராசபக்சேவுக்கு அழைப்புக் கொடுத்துள்ள இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இனக்கொலை குற்றவாளி கோத்தபயவை கைது செய்து சிறையிலடைக்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு கோரிக்கை வைக்க வேண்டும்
தமிழ்நாடெங்கும் உள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இனக்கொலை இலங்கையின் அதிபர் கோத்தபய இராசபக்சேவை அழைக்கும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து வாய்ப்புள்ள மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்