உபா சட்டத்தில் கைதுச் செய்யப்பட்ட 97.8% நபர்கள் அப்பாவிகள் என்றும் அரசியல் பழிவாங்கலுக்காகவே சட்டம் ஆட்சியாளர்களால் பயன் படுத்தப்படுகிறதென்றும், உபா சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனித உரிமைப் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு உரிமைகளுக்காகப் போராடும் சாமானிய மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உபா (UAPA) எனும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள்மீது என்ஐஏ என்னும் தனி காவல்படை சுமத்திய குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களில் நிரூபிக்க முடியாமல் திணறுவது நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகின்றது. உபா சட்டம் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களைப் பழிவாங்கும் நோக்கிலும், குரலற்றவர்களின் குரலை நசுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது என்பதையும் அந்தத் தகவல் பறைசாற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ள புள்ளி விபரங்கள் உபா சட்டம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2019ஆம் ஆண்டில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 1948 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2016ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொத்தமாக உபா சட்டத்தின் கீழ் 5922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதில் 132 பேர் (மட்டுமே) குற்றவாளிகள் என்று நீதிமன்றங்களில் காவல்துறையினரால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்ததை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019ல் மட்டும் தேசத்துரோக வழக்குகளில் 96 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், இதில் 2 பேர்மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், 29 பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர் என்றும், 96 பேர் கைது செய்யப்பட்ட 93 வழக்குகளில் 40 வழக்குகளில் மட்டுமே போலீசார் குற்ற பத்திரிக்கையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர் என்றும் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
2016 முதல் 2019 வரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 2.2 சதவீதம் பேர்மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும், மீதமுள்ள அப்பாவிகளான 97.8 விகிதத்தினர் சட்டத்திற்குப் புறம்பாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை அனுபவிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
தனியார்மயமாகும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை – பதவியை ராஜினாமா செய்த தெலுங்கு தேச சட்டசபை உறுப்பினர்
”மத்திய உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்த இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் மத்திய அரசின் இந்தக் கொடூர உபா சட்டமானது பழிவாங்கும் நோக்கத்தில், பாசிச எண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாகிறது.” என்றும் “பாஜக ஆளும் கர்நாடகம், அஸ்ஸாம், உ.பி., ஹரியானா, நாகலாந்து மாநிலங்களிலும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களிலேயே அதிகமான எண்ணிக்கையில் இந்த உபா சட்டம் சட்டவிரோதமாகச் சாமானியர்கள் மீது பாய்ந்துள்ளது” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்பாவிகள்மீது அநியாயமான முறையில் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த உபா சட்டம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நடைமுறையில் இருப்பது பெரும் இழுக்கு என்று தெரிவித்த அவர், உபா சட்டத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் மத்திய அரசை ஒருமித்து வலியுறுத்திப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.