Aran Sei

பெற்றோர் அனுமதியுடன் இந்து முஸ்லிம் திருமணம் – தடுத்து நிறுத்தியது உபி காவல்துறை

பெற்றோர்கள் அனுமதியுடன் நடைபெற்ற இந்து முஸ்லிம் திருமணத்தை உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேச அரசு ”இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் திருமணம் செய்து மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்காகச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் என்கிற சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தச் சட்த்தின் கீழ் ஓவைஸ் அகமது எனும் நபர் உபி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் புறநகர்ப் பகுதியான பாராவில் வசித்து வரும் முகமது ஆசிஃப் மற்றும் ராய்னா குப்தா (பால்ய கால நண்பர்கள்) தம்பதியரின் திருமணத்தை உபி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : indian express
credits : indian express

இந்து முஸ்லிம் குடும்பங்களுக்கிடையே திருமணம் நடைபெற இருப்பதாக இந்து மகா சபையின் மாவட்ட தலைவர் பிரிஜேஷ் ஷுக்லா கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திருமண நடக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.

”சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட உத்தரப்பிரதேசச் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் 2020-ன் கீழ் இரு மதநம்பிக்கை கொண்டுள்ள நபர்களின் திருமணத்தை நடத்துவதற்கென்று வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாததால் திருமண நடவடிக்கைகளை நிறுத்துமாறு குடும்பங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன, ”என்று பாரா காவல் நிலைய நிலைய அதிகாரி திரிலோகி சிங் கூறியுள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

எந்தவொரு நபரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குக் கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி, எந்தவொரு மோசடி வழிமுறையினாலும் அல்லது திருமணத்தினாலும் மாற்ற முயற்சிக்கக் கூடாது எனப் புதிதாக இயற்றப்பட்டுள்ள மதமாற்ற தடுப்புச் சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டத்தின் படி, மாவட்ட நீதிபதியின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இந்து முஸ்லிம் திருமணம் நடைபெற வேண்டும். மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 8-ன் கீழ் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

credits : indian express
credits : indian express

திருமணம் நிறுத்தப்பட்டது குறித்து மணமகளின் தந்தை விஜய் குப்தா ”இரு குடும்பங்களும் முழு மனதுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் திருமணத்திற்காக மதம் மாறக் கூறி யாரும் கட்டாய மத மாற்றம் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை – மத்தியப் பிரதேசம்

”இரு குடும்பங்களும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டோம், மாவட்ட நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இந்து முஸ்லிம் திருமணங்களை நடத்த முடியும் என்று காவல்துறையினர் சொல்லிய பின்புதான் எங்களுக்கே தெரியும்” அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்து முறைப்படியும் பின்னர் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் நடைபெற்றதால் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை எனத் துணை காவல் ஆணையர் சுரேஷ் ராவத் தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்