Aran Sei

`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?

Credits New Indian Express

நாட்டில் `லவ் ஜிகாத்’ அதிகரித்து வருகிறது என்று உத்தரப்பிரதேச அரசு மற்றும் யோகி ஆதித்யநாத் தீவிரமாகப் பரப்பிவரும் வாதம் வெறும் பொய்ப் பித்தலாட்டம் என்று சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது .

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்கள், இந்துப் பெண்களைக் காதல் என்ற பெயரில் திருமணம் முடித்து மத மாற்றம் செய்து இந்து மதத்தைச் சிறுபான்மைச் சமூகமாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்துப் பெண்களைப் பாதுகாக்க, லவ் ஜிகாதுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்.” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசக் காவல்துறை `லவ் ஜிகாத்’ வழக்குகளை விசாரிக்க அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்ததில், யோகி ஆதியநாத் முன்வைக்கும் `லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டு உண்மையில் பூதாகரமானது இல்லை என்று தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள 22 காவல் நிலையங்களும் சந்தேகப்படும்படியான இந்து-முஸ்லிம் காதல் சம்பவங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் 14 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மீது சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்பு விசரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அவற்றுள் 8 வழக்குகளில், இந்துப் பெண்கள் விருப்பத்துடன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆடவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள் அல்லது உறவில் இருந்துவருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆறு வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதம் இல்லாமல், ஒரே மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும்போதே பெண்கள் அவர்கள் கணவர் மீது கடத்தல்வழக்கு பதிவு செய்யும்படி வற்புறுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகப் பெற்றோருடன் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அப்படி இருக்கையில், லவ் ஜிகாத் குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை முடிவுகள், காதல் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்கிறார்கள் என்ற அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டினைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்