அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழு அதன் ஆசிரியர்களின் தொழிற்சங்கத்துடன் கூட்டுப் பேரம் பேசும் ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்புக் கொள்கைகளில் சாதி சேர்க்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு எண்ணற்ற ஆசிரியர்கள் உட்படப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இது இந்திய மற்றும் தெற்காசிய வம்சாவளி நபர்களைத் தனிமைப்படுத்தும் என்று 80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒரு சிறிய குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
“பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு குறித்து கருத்து கூறுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, ஆனால் நான் கூற நினைத்ததைப் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை எதிர்த்த சிறிய ஆசிரியர் குழு கூறிவிட்டது. அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுவது என்பது நம் அனைவரின் இலக்காகும். ஆனால் இந்திய மற்றும் தெற்காசிய ஆசிரியர்களை மட்டும் தனிமைப்படுத்தும் இந்த முடிவு பாரபட்சமானது என்று” இந்து அமெரிக்கன் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சுஹாக் சுக்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“சாதி சமத்துவத்தை எதிர்க்கும் எதிரிகளின் ஜனநாயக விரோத முயற்சிகளால் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை மாற்ற முடியாது. நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம், எங்கள் உரிமைகளைக் காக்க நாங்கள் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்குக் கூட செல்வோம். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளோம்” என்று சாதியப் பாகுபாட்டை நிறுவன ரீதியாக அங்கீகரிப்பதற்காகச் செயல்பட்டு வரும் தலித் உரிமைகள் அமைப்பான சமத்துவ ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
“நான் ஒரு தலித். நேபாளத்தில் எங்கள் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக நான் அமெரிக்காவுக்குச் சென்றேன். நான் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்தித்தேன். எனது முதுகலை பட்டப்படிப்பின்போது நேபாளத்தைச் சேர்த்த இரு மாணவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் எனது பெயரை நான் அறிமுகம் செய்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் உள்ள 25% தலித் மக்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டைச் சந்திக்கின்றனர்” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் பாரியர் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.