Aran Sei

ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடமாக்கிய பல்கலைக்கழகம் – பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்ட கேரள அரசு

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களான  சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பதால் மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்கான பாடத் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்துத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பெனாய் விஸ்வம் உட்பட இடது முன்னணி தலைவர்கள் கண்டித்துள்ளனர்.  காங்கிரஸ் தலைவர்களை இதற்கு எவ்விதமான எதிவினையும் ஆற்றவில்லை

காவிமயமாக்கல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பல்கலைக்கழகம் ”அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து மாநில அரசு இதுகுறித்துப் பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. அதேபோலப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பாடத்திட்டத்தைப் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

 

Source: Deccanherald

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்