Aran Sei

‘பகவத் கீதையை பள்ளியில் பாடமாக்குவது குறித்து மாநில அரசுகளே சிந்தியுங்கள்’ – ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

 பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்தும் குஜராத் மாநில அரசின் முடிவை, தங்கள் மாநிலங்களிலும் அமல்படுத்துவது குறித்து ஒவ்வொரு மாநில அரசும் சிந்திக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நேற்று (மார்ச் 19), ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பிரகலாத் ஜோஷி, “பகவத் கீதை நமக்கு ஒழுக்கத்தையும் நெறிமுறைகளையும் கற்பிக்கிறது. சமூகத்தின் நலனுக்காக நாம் ஆற்ற வேண்டிய பொறுப்பை பகவத் கீதை நமக்கு காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “நமது மாணவர்களை ஊக்கப்படுத்தும் பல ஒழுக்கக் கதைகள் அதில் உள்ளன. ஒவ்வொரு மாநில அரசும் பகவத் கீதையை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குஜராத் பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்பு

மார்ச் 18 அன்று, குஜராத் சட்டப்பேரவையில், கல்வித்துறைக்கான  நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி, 2022-23 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள 6 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இணைக்கப்படும் என்று அறிவித்தார்.

ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் கீழ், பகவத் கீதையில் பொதிந்துள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

பகவத் கீதையை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நவீன மற்றும் பண்டைய கலாச்சாரம், மரபுகள், அறிவார்ந்த விசயங்கள்குறித்து அறிந்து கொள்ள மாணவர்கள் இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரம் குறித்து பெருமை அடைவார்கள் என்று அமைச்சர் ஜிது வகானி தெரிவித்தார்.

பள்ளி பாடத்திட்டத்தில், பகவத் கீதையை சேர்க்கும் குஜராத் அரசின் முடிவைக் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்றன.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 18), பகவத் கீதையை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்போம் என்று கர்நாடக மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்குப் பகவத் கீதை – நிராகரித்த உயர் நீதிமன்றம்

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பி.சி.நாகேஷ், “இந்த நாட்டில் பகவத் கீதையை பல ஆண்டுகளாக மக்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பகவத் கீதை அனைத்து மக்களாலும் படிக்கப்படுகிறது. அப்புத்தகம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்தும் வகையில், பகவத் கீதையை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் விவாதிப்போம்”என்று கூறினார்.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ANI, PTI.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்