Aran Sei

‘சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் பேச்சுரிமைக்கு எதிரானது’: கருத்துக் கூறிய ட்விட்டர் – கண்டித்த ஒன்றிய அரசு

ட்விட்டரின் அறிக்கையானது முற்றிலும் ஆதாரமற்றது பொய்யானது என்றும் தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி என்றும் இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில், சமூக வலைதள நிறுவனங்கள் தன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை அவ்வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ மனு – தகவலைத் தரமறுத்த ஒன்றிய அரசு

இது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கருத்து சுதந்திரம் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வகையிலான செயற்பாடுகளைக் கையாள்வது கவலை அளிக்கிறது. இந்திய சட்ட விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதேநேரம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகளின்படி நாங்கள் இயங்குவதே சரியானதாக இருக்கும். ஆகவே, இந்தப் புதிய விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு, ஒன்றிய அரசுடன் திறந்தமனதுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ட்விட்டர் நிறுவனம் தயாராக உள்ளது.” என்று கூறியிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அறிக்கைக்கு ஒன்றிய அரசு  கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (மே 27) இந்திய ஒன்றியத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவதில் இந்தியா பல நூற்றாண்டுகளாக பெருமை மிக்க பாரம்பரியத்தை உடையது. இந்தியாவில் சுதந்திரமான பேச்சைக் காப்பது, ட்விட்டர் போன்ற தனியார் மற்றும் லாப நோக்குடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மட்டுமான தனியுரிமை அல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மற்றும் அதன் வலுவான அமைப்புகளின் உறுதிப்பாடு அர்ப்பணிப்பு கொண்டவையாகும்.” என்று தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகள்: அழிக்க மறுக்கும் டிவிட்டர் – ‘கூ’ தளத்திற்கு மாறும் மத்திய அமைச்சர்கள்

“தனது செயல்பாடுகள் மற்றும் வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் வழியாக இந்தியாவின் சட்ட அமைப்பைக் குறைவாக மதிப்பிட ட்விட்டர்  முயல்கிறது. மேலும், எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து தொடங்கி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற ட்விட்டர் மறுக்கிறது. மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், ட்விட்டர் நிறுவனம் மிகவும் உறுதிப்பாட்டுடன் இருந்தால், அது போன்ற செயல்முறையை ஏன் இந்தியாவில் ஏற்படுத்தவில்லை?” என்று  அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், “ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் இந்தியாவில் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்றே இந்திய அரசு விரும்புகிறது. ட்விட்டரின் அறிக்கையானது முற்றிலும் ஆதாரமற்றதும் பொய்யானதும் ஆகும். தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி. இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது.” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்