பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”வரும் 2021-22ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை செய்தவதன் வழியாக நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளும், இரு வங்கிகளின் பங்குகளும் அடங்கும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.” என்று அவர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, 2021-22ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்ப்பார்ப்பை தெரிவித்திருந்தார்.
#Budget2021 must:
-Support MSMEs, farmers and workers to generate employment.
-Increase Healthcare expenditure to save lives.
-Increase Defence expenditure to safeguard borders.
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2021
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் கைகளுக்குப் பணத்தை கொண்டு செல்ல மறந்த மோடி அரசாங்கம் இந்தியாவின் சொத்துக்களை தன்னுடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு விற்க திட்டமிட்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Forget putting cash in the hands of people, Modi Govt plans to handover India's assets to his crony capitalist friends.#Budget2021
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2021
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் வழியாக, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.1.20 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களையும், ரூ.90 ஆயிரம் கோடி வங்கிப் பங்குகளை விற்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், நடப்பு நிதியாண்டில் பங்குகள் விற்பனை செய்ததன் வழியாக ரூ.19,499 கோடி மட்டுமே அரசுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.