Aran Sei

மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவிடம் உலக நாடுகள் சராமாரி கேள்வி

Image Credits: Al Jazeera

5 ஆண்டுகளில் முதல்முறையாக, ஐக்கிய நாடுகள் (ஐநா) மனித உரிமை அமைப்பின் மதிப்பாய்வு கூட்டத்தை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவி காலத்தின்போது முகாமில் வைக்கப்பட்ட புலம்பெயர் குழந்தைகள் மற்றும் கொல்லப்பட்ட கறுப்பின மக்களை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஐநா உறுப்பு நாடுகளின் மனித உரிமை கூட்டம் நடைபெறுகிறது. இது “உலகலாவிய காலமுறை மீளாய்வு” (Universal Periodic Review) என்று அழைக்கப்படுகிறது. திங்களன்று அமெரிக்காவிற்கான முறை வந்துள்ளது. இதில், ஈரான், சிரியா, வெனிசுலா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவை நோக்கிக் கேள்வி எழுப்ப அதிக ஆர்வம் கட்டின.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அறிக்கையில், அந்நாட்டில் வாழும் மக்களின் உரிமை குறித்த பதிவுகள் இருந்தன. இதனையொட்டி நடைபெற்ற மூன்றரை மணிநேர கூட்டத்தில், கிட்டத்தட்ட 120 நாடுகள் கேள்விகளை எழுப்ப முன்வந்துள்ளது. மக்களின் உரிமைகளை மேம்படுத்த அமெரிக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த அமர்வில் பதிலளித்த தூதர் ஆண்ட்ரூ ப்ரெம்பெர்க், அமெரிக்க ஜனநாயக அமைப்பின் வலிமை குறித்து பேசியுள்ளார். “அமெரிக்க ஜனநாயக அமைப்பு ஆய்வு மற்றும் விவாதத்தை அனுமதிக்கிறது. இதன் மூலம் முன்னேற்றத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்தலாம். எங்கள் குறைபாடுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார அரசாங்கங்களால் மனித உரிமை சீரழிந்த உள்ளது. மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தை காப்பாற்றுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது. வெளிப்படைத்தன்மை மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நாங்கள் வரவேற்கிறோம் என்பதை எங்கள் செயல்களின் மூலம் நிரூபிக்கிறோம்” என்று ஆண்ட்ரூ ப்ரெம்பெர்க் தனது தொடக்க உரையில் கூறியுள்ளார்.

முன்கூட்டியே அனுப்பப்பட்ட சில கேள்விகளின் மாதிரி, மனித உரிமை குறித்த தீவிர ஆய்வுக்குப் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவில், கடந்த நான்கு ஆண்டுகளில், எத்தனை புலம்பெயர்ந்த குழந்தைகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் எத்தனை புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் என்று சீனா கேட்டுள்ளது; மற்ற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டவிரோத நடைமுறையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவருமா என்று ஈரான் கேட்டுள்ளது; அமெரிக்க படைகள் சிரியாவின் நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்று சிரிய அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மற்ற நாடுகளில் இராணுவத் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், அவர்களின் குடிமக்களை கொலை செய்வதை நிறுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா என்று சீனாவின் தூதரக குழு கேட்டுள்ளது.

கொரோனா தோற்று காரணமாக இந்தக் கூட்டமும் காணொளி உரையாடுதல் மூலம் நடைபெற்றுள்ளது. கேள்விகளையும் கருத்துகளையும் பதிவு செய்ய ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2015-ம் ஆண்டு அமெரிக்கா இது போன்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டது. ட்ரம்ப் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றியது. உறுப்பினர்களாக இருந்தபோதிலும், மனித உரிமைகளை மீறும் எதேச்சதிகார ஆட்சிகளை, மனித உரிமை பேரவை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்