Aran Sei

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு பிணை – ஆரோக்கிய சேது செயலியை நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவு

டந்த ஆண்டு, வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர் காலித்துக்கு, டெல்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது.

இவ்வளவு ‘பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில்’ உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகை அவசியமற்றது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என பார் & பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது. அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டத்தை கலைப்பதற்காக நடத்தப்பட்ட வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லீம்கள். பல முஸ்லீம் வீடுகளும், கடைகளும் வழிபாட்டு தலங்களும் தாக்கப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

 

இந்தக் கலவரங்களுக்குப் பின்னர், ‘சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும்’, ‘இந்த வன்முறைச் சம்பவங்களுக்குத்  திட்டம் தீட்டியதாகவும்’ உமர் காலித் மீதும் ஜேஎன்யூவின் முனைவர் பட்ட மாணவர் ஷர்ஜீல் இமாம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ஷர்ஜீல் இமாமும், செப்டம்பர் மாதம் 13-ம் தேதி உமர் காலித்தும் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 24, 2020 அன்று சந்த்பாக் புலியா பகுதியின் காரவால் நகர் சாலையில் வெடித்த  வன்முறை தொடர்பாக, கஜுரி காஸ் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலான வழக்கில் பிணை கோரும் மனு நேற்று (ஏப்ரல் 15),  டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

‘சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தவிர வேறு சிக்கலைச் சந்திக்கவில்லை’ – உமர் காலித்

இந்த வழக்கில் உமர் காலிதுக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

“வழக்கில் புலனாய்வு முடிந்து விட்டது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் பிடிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் அக்டோபர் 1, 2020 முதல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறரை இன்னும் கைது செய்யவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது” என்று நீதிபதி கூறியுள்ளார்.

“எந்தவொரு சி.சி.டி.வி காட்சிகளிலும் அல்லது சமூகவலைதளங்களில் பரவிய காணொளிகளிலும் உமர் காலித் இடம்பெற்றிருக்கவில்லை. எந்தவொரு தனிநபரின் சாட்சியும் அல்லது எந்த காவல்துறையினரின் சாட்சியும் குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் உமர் காலித் இருந்ததாக அடையாளம் கண்டு கூறவில்லை.” என்று நீதிபதி தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளாக, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக் கூடாது என்றும், வழக்கு விசாரணை நடக்கும் அனைத்து நாட்களிலும் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிணை நிபந்தனையாக, மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை தன்னுடைய அலைபேசியில் அவர் நிறுவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று பார் & பெஞ்ச் செய்தி தெரிவிக்கிறது.

ஆரோக்ய சேது செயலி அதை நிறுவிக் கொண்டவர்களை உளவு பார்ப்பதற்கானது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்று சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

உமர் காலித்திற்கு எதிராக ஊடகங்களின் பொய் பிரச்சாரம் – பொறுப்புடன் செயல்பட நீதிமன்றம் வலியுறுத்தல்

வன்முறை தொடர்பான வழக்கில், உமர் காலித்துக்கு பிணை கிடைத்தாலும், இந்த வன்முறைக்கு சதி திட்டம் தீட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்