Aran Sei

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பாஜகவினரின் தோல்வியே காரணம்’ – உமா பாரதி

மூன்று விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் பிரதமர் வெற்றிபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் அனைத்து பாஜக தொண்டர்களின் பலவீனமும்தான் என்று மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் உமா பாரதி, “பிரதமரின் நவம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு என்னை வாயடைக்கச் செய்தது. அதனால்தான், மூன்று நாட்களுக்குப் பிறகு அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கிறேன். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கும் போது பிரதமர் கூறியவற்றைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மூன்று விவசாயச் சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் பிரதமர் வெற்றிபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் அனைத்து பாஜக தொண்டர்களின் பலவீனமும்தான்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இந்தச் சட்டங்கள் குறித்து விவசாயிகளை அணுகி, அவர்களிடம் விளக்குவதில் நாங்கள் (பாஜக தொண்டர்கள்) ஏன் தோல்வியடைந்தோம்? இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய் பரப்புரைகளை எதிர்கொண்டு, அதை எதிர்க்க நாங்கள் (பாஜக) தவறிவிட்டதை நான் ஆழமாக உணர்ந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

விவசாய சட்டங்களை ரத்து செய்வதன் வழியாக, பிரதமர் தனது மேன்மையை நிலைநாட்டியுள்ளார் என்றும் இத்தகைய அபூர்வமான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் நீண்ட காலம் வாழ்ந்து அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற காசி விஸ்வநாதரை நான் பிரார்த்தித்து கொள்கிறேன் என்றும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்