Aran Sei

‘உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ – இஸ்லாமிய மாணவிகள் உரிமைக்குரல்

டுப்பியில் உள்ள மகளிர் அரசு கல்லூரியைச் சேர்ந்த நான்கு இஸ்லாமிய மாணவிகளை தலையில் முக்காடு அணியாமல் (ஹிஜாப்) வகுப்புகளுக்கு வருமாறு நிர்வாகம் உத்தவிட்டிருந்த நிலையில், நேற்று(பிப்பிரவரி 1) மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை ஆடைக் கட்டுப்பாடு விதியைக் காரணம் காட்டி வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்னும் அக்கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்த ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக நேற்று(ஜனவரி 31) நடந்த கல்லூரி வளர்ச்சிக் குழுவின் கூட்டத்தில், மாணவிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு ஓரளவு ஒப்புக்கொண்டதாக அக்குழுவின் தலைவரும் உடுப்பி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான கே.ரகுபதி பட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாது – கர்நாடக மகளிர் கல்லூரி உத்தரவு

ஆனால், கே.ரகுபதி பட்டின் அறிக்கையை அம்மாணவிகள் மறுத்துள்ளனர்.

“நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, நாங்கள் ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டோம். கல்லூரி நிர்வாகம் எங்களைப் ‘பழிவாங்குவோம்’ என்று அச்சுறுத்தியது. ஆனால், இன்று நாங்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளோம். இது எங்கள் அரசியலமைப்பின் உரிமை” என்று நான்கு மாணவிகள் கூறியுள்ளனர்.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததை எதிர்த்தது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நான்கு மாணவிகளில் ஒருவரான ரேஷாம் பாரூக் சார்பில் அவரது சகோதரர் முபாரக் பாரூக் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மாணவிகள் ஹிஜாப் அணியும் உரிமை என்பது அரசியலமைப்பின் 14 மற்றும் 25 வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகம் – மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இது குறித்து, அம்மாணவிகளில் ஒருவரான அல்மாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது குறித்து இப்போது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சட்டரீதியிலான வழியில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவியான அலியா அசாதி, ஹிஜாப் அணிவது தனது அரசியலமைப்பு உரிமை என்றும் அதை யாராலும் பறிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அலியா அசாதி, “வரி செலுத்துவோரின் பணத்தில் அரசு கல்லூரி நடத்தப்படுவதால், தொடர்ந்து நாங்கள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்