Aran Sei

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்று சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 23), சிவசேனா கட்சியின் நிறுவனரும் அவரது தந்தையுமான பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய உத்தவ் தாக்ரே, சிவசேனா மகாராஷ்டிராவிற்கு வெளியே தனது அரசியல் தடத்தை விரிவுபடுத்த முயலும் என்றும் தேசியளவில் ஒரு அரசியல் பாத்திரத்தை வகிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“அதிகாரத்தை கைபற்றி அதன் வழியாக இந்துத்துவாவின் கொள்கையை முன்னெடுப்பதற்காகவே பாஜகவுடன் சிவசேனா கூட்டணி சேர்ந்தது. பாஜக அரசியல் களத்தில் வளர்ந்து வரும் போது, ​​சிவசேனா உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. அப்போது, ​​பல இடங்களில் பாஜக டெபாசிட் கூட இழந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கோவாவில் பாஜகதான் உண்மையான மாட்டிறைச்சிக்கு ஆதரவான கட்சி’ – சிவசேனா விமர்சனம்

“இந்துத்துவாவுக்கு அதிகாரம் வேண்டும் என்பதால்தான் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்தது. சிவசேனா ஒருபோதும் அதிகாரத்திற்காக இந்துத்துவாவை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிவசேனா பாஜகவை விட்டுதான் வெளியேறியதே தவிர இந்துத்துவாவை விட்டு அல்ல. பாஜகவின் சந்தர்ப்பவாத இந்துத்துவ கொள்கை என்பது, அதிகாரத்தைக் கைபற்றுவதற்காக மட்டுமே என்று நான் நம்புகிறேன்” என்று உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

“காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்தது. சங்-முக்த் பாரதம் (ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியா) குறித்து பேசிய நிதிஷ் குமாருடன் (பீகாரில்) பாஜக கூட்டணி வைத்தது. தேர்தலுக்கு பின், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா வெளிப்படையாக கூட்டணியை வைத்தது. அதேநேரத்தில், பாஜக கட்சியானது மற்ற கட்சிகளில் பிளவுகளை உருவாக்கியது. தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை அகற்றியது” என்று அவர் கூறியுள்ளார்.

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

“அகாலிதளம், சிவசேனா போன்ற கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறியதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது சுருங்கிவிட்டது. பாஜகவின் தேசிய அரசியல் ஆசைகளை நிறைவேற்ற பாஜகவை நாங்கள் முழு மனதுடன் ஆதரித்தோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தலைமை ஏற்கும்போது, அவர்கள் தேசிய அளவில் முன்னிற்பார்கள் என்பது எங்கள் புரிந்துணர்வு. ஆனால், எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது” என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் மண்ணிலேயே எங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக, 2019 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணையும் முடிவை நாங்கள் எடுத்தோம். பாஜக தனது அரசியல் லாபத்திற்காக தனது கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக் கொள்கிறது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்

அதிகாரத்திற்காக சிவசேனா இந்துத்துவாவை கைவிட்டுவிட்டது என்ற பாஜகவின் கருத்திற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, “சிவசேனா பாஜகவை விட்டுதான் வெளியேறியது, இந்துத்துவ சித்தாந்தத்தை விட்டு வெளியேறவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது என்ற எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாள் விழாவில் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து பிரிந்த சிவசேனா கட்சியானது, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகா விகாஸ் ஆகடி (எம்விஏ) கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்