Aran Sei

ஓட்டுனர்களின் உரிமைகள் – பிரிட்டனில் பணிந்த ஊபர், பிற ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் தாக்கம் என்ன?

image credit : techcrunch.com

பிரிட்டிஷ் (ஐக்கிய முடியரசு) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஓட்டுனர்களை தொழிலாளர்களாக நடத்தப் போவதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஊபர், சென்ற மாதம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாகத் தோன்றினாலும், வேலை நேரத்தை ஓட்டுனர் முதல் சவாரியை ஏற்றுக் கொண்ட நேரத்திலிருந்து கணக்கிடுவது என்ற நிறுவனத்தின் முடிவு தொழிலாளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது என்று டெக் கிரஞ்ச் செய்தித் தளம் தெரிவிக்கிறது.

ஊபர் ஓட்டுநர்களுக்கு தொழிலாளர் நல உரிமைகள் பொருந்தும் – பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய முடியரசில் சுய வேலை செய்பவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், தொழிலாளர் என்று மூன்று வகையான உழைப்பாளர் பிரிவுகள் உள்ளன. “தொழிலாளர்கள்” என்ற வகை ஊபர் ஓட்டுனர்களை நிறுவனத்தின் ஊழியர்களாக்கி விடவில்லை என்றாலும் குறைந்தபட்ச ஊதியம், விடுமுறை சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான உரிமையை அவர்கள் பெறுகிறார்கள்.

ஊபர் நிறுவனத்தின் செயலியின் மூலம் வாடகை கார் ஓட்டுனர்கள், சவாரி தேடும் வாடிக்கையாளர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களை சுயேச்சையான ஒப்பந்த ஊழியர்கள் என்ற வகையில் ஊபர் நடத்தி வந்தது. இதை எதிர்த்து தம்மை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2 ஊபர் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்கில், பிரிட்டிஷ் வேலைவாய்ப்பு மன்றத்தின் (தொழிலாளர் நீதிமன்றம்) தீர்ப்பை உச்சநீதிமன்றம் சென்ற மாதம் உறுதி செய்தது.

இன்று முதல் ஐக்கிய முடியரசின் அனைத்து ஊபர் ஓட்டுனர்களுக்கும் அவர்களது மொத்த வருமானத்தில் 12.07% என்ற அடிப்படையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும், அது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. சவாரி கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிறகு, செலவுகள் போக குறைந்த பட்ச ஊதியம் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஊபர் தெரிவித்துள்ளது.

தகுதிபெறும் ஓட்டுனர்கள், நிறுவனத்தின் பங்களிப்புடன் கூடிய ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் அந்த பங்களிப்பு ஓட்டுனரின் ஊதியத்தில் சுமார் 3% ஆக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

“ஓட்டுனர் செயலியில் லாக்-இன் செய்த நேரத்தில் இருந்து இல்லாமல், முதல் சவாரியை ஏற்றுக் கொண்டதிலிருந்து வேலை நேரத்தைக் கணக்கிடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று செயலி ஓட்டுனர்கள் மற்றும் தூதர்கள் சங்கம் கூறியுள்ளது. “இதன் மூலம் ஊபர் ஓட்டுனர்கள் தங்கள் ஊதியத்தில் 40 முதல் 50% ஏமாற்றப்படுவார்கள்” என்று அது கூறியுள்ளது.

“இது தொடர்பாக, மீண்டும் வேலைவாய்ப்பு மன்றத்தை அணுகி ஓட்டுனர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதியத்தை பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது

“தொழிற்சங்க அங்கீகாரத்தை நோக்கி நகர்வதிலும், வேலை நீக்க நடைமுறை, மேல் முறையீடு, தரவுகளை பெறும் ஒப்பந்தம் ஆகியவற்றிலும் ஊபர் முன்னேற்றம் காண வேண்டும்” என்று தொழிற்சங்கம் கூறியுள்ளது.

ஐக்கிய முடியரசில் தொழில் தகராறு வழக்கை எதிர்கொண்ட ஊபர், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறது. ஐக்கிய முடியரசில் ஊபர் எடுத்துள்ள இந்த முடிவு பிற ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டெக் கிரஞ்ச் தெரிவிக்கிறது.

இந்தியாவிலும் ஊபர், ஓலா, சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற செயலி தொழிலாளர்களின் உரிமைகள் மீது இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்