Aran Sei

ஆணவக் கொலைகளுக்கு எதிராக அமைதி காக்கும் தமிழகம் ? விடியல் எப்போது?

credits : the hindu

தமிழகத்தில், ஒரு வாரத்தில் (7/11/21 – 15/11/21) இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

சம்பவம் 1:

கன்னியாகுமரி மாவட்டம், தோவாலைபுதூர் பகுதியைச் சேர்ந்த, 27 வயது இளைஞரான சுரேஷ் குமாரும் (சாம்பவர்) , காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்த தங்கநீலா (வெள்ளாளர்) என்பவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பி.காம் பட்டதாரியான சுரேஷ் குமார் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு தங்கநீலா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், தங்கநீலாவுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தங்கநீலா குடும்ப உறுப்பினர்கள் சுரேஷ் குமாரை மிரட்டியுள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 7-11-21 அன்று, காட்டுபுதூரைச் சேர்ந்த ஒருவர், சுரேஷ் குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், உடனடியாக காவல்நிலையத்துக்கு வரும்படி, பூதப்பாண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ், தங்கநீலாவின் சகோதரர் தாமோதரன், தங்கநீலாவின் உறவினர் ஒருவர் ஆகிய மூவர், சுரேஷ் குமாரின் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுரேஷ் குமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில், அவர்களை பின் தொடர்ந்து வருவதாக கூறி மதியம் 1.00 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அதன் பின்னர், தங்கநீலா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோப்பில் உயிருக்கு போராடிய நிலையில் சுரேஷ் குமார் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றபோது சுரேஷ் குமார்உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் 2:

சேலம் மாவட்டம், தட்டாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.மோகன்ராஜ் (அருந்ததியர்) என்பவரும் சேலம் மாவட்டம் இராம கவுண்டம்புதூர் கிராமத்தை சேர்ந்த பி.சித்ரா (வன்னியர்) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெண் வீட்டிற்கு தெரிந்தவுடன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்ராவிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால கடந்த நவம்பர் 11 அன்று வீட்டை விட்டு வெளியேறி, 12 ஆம் தேதி அன்று மோகன்ராஜ் மற்றும் சித்ரா இருவரும் மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, சித்ராவின் குடும்பத்தில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருந்ததால் பாதுகாப்பு கோரி 13 ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததுள்ளனர். ஆனால் தாரமங்கலம் காவல் நிலையத்தில், சித்ராவின் பெற்றோர் கொடுத்த புகாரை காரணம் காட்டி, சங்ககிரி காவல் துறையினர் சட்டத்திற்கு புறம்பாக தம்பதியினரை தாரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தாராமங்கலம் காவல்நிலையத்தில், அன்று மாலையே இருவரும் பிரித்து வைக்கப்பட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அன்று இரவு மோகன்ராஜ் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது, மோகன்ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மாவேலிபாளையம் இரயில் நிலைய பாலத்திற்கு அடியில் இருந்ததை பார்த்து தண்டவாளப்பகுதியில் தேடிச் சென்றுள்ளனர். அங்கு மோகன்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மோகன்ராஜ் இறப்பதற்கு முன்பு தனது டைரியில், சித்ராவின் சகோதரிகள் கோகிலா, பானுமதி மற்றும் பானுமதியின் கணவர் தன்னை சாதிப் பெயரை கூறி இழிவுபடுத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சித்ராவை பிரித்து சென்றுவிட்டனர் என எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர், சித்ராவின் குடும்பத்தினரால் மோகன்ராஜ் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் மோகன்ராஜ் குறிப்பிட்ட மூன்று பேரையும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி தோவாலைபுதூர் சம்பவத்திலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த இரண்டு நிகழ்வுகள் தொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் அரண்செய்-யிடம் பேசுகையில், ”சாதி மறுப்பு திருமணம் அல்லது காதல் திருமணம் செய்யும் தம்பதிகளை சமூகம் அங்கீகரிப்பதில்லை. இதே மனநிலையைத் தான் காவல்துறையும் வெளிப்படுத்துகிறது. தன் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் காதல் திருமணம் செய்துள்ளதாக பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளிக்கும் விவகாரங்களில், 90 சதவீத தம்பதிகள் காவல்நிலையத்திலேயே வைத்து பிரித்து வைக்கப்பட்டு, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.

மேலும் ”சமூக விரோதிகளிடம் இருந்து தப்பித்து, சட்டத்தின் பாதுகாப்பு தேடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடையும் தம்பதிகளுக்கு, சட்டத்தின் எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. வெளியில் இருக்கும் அடக்குமுறையை தாண்டி பல அடக்குமுறைகளை காவல்நிலையத்தில் தம்பதிகள் எதிர்கொள்கின்றனர். எனவே, தமிழகத்தில் நடந்த ஆணவக் கொலை சம்பவங்களில் காவல்துறை எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் சாமுவேல் கூறினார்.

“இனிமேல் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்துக்கு வரும் தம்பதிகளை, எவ்வாறு அணுக வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்க வேண்டும்”என்று கூறிய சாமுவேல் ”சட்டத்தின்படி காவல்துறை செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய “ஸ்டார்மிங் ஆப்ரேஷனை” தொடங்கி, குற்றப் பிண்ணணி கொண்ட மூவாயிரத்திற்கும் அதிகமான நபர்களை கைது செய்த காவல்துறையும், குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட அரசும், சாதி ஆணவக் படுகொலைகளை தடுக்க என்ன முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

  • தேவா பாஸ்கர், செய்தியாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்