Aran Sei

காந்தி கொலை தொடர்பான மர்மத்தை விளக்கும் இரண்டு புத்தகங்கள் – காந்தியின் பிறந்தநாளில் வெளியானது

காந்தியின் கொலை தொடர்பான மர்மத்தை விளக்கும் வகையில் காந்தியின் கொள்ளுப் பெயரன் துஷார் காந்தி எழுதிய ”லெட்ஸ் கில் காந்தி”, அப்பு எஸ்தோஸ் சுரேஷ் மற்றும் பிரியங்கா கோதம்ராஜு எழுதிய ”தி மர்டரர், தி மொனார்க் அண்ட் தி பகீர்” என்ற இரண்டு புத்தகங்களும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி (நேற்று) வெளியாகியுள்ளது.

1948 ஆம் ஆண்டு காந்தி கொல்லப்பட்டது தொடர்பான சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதில் புதிய தளத்தை இந்த புத்தகங்கள் உருவாக்கும் என வெளியீட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”லெட்ஸ் கில் காந்தி” புத்தகத்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ள துஷார் காந்தி, “காந்தியை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மகாராஜவின் உதவியாளரால் கோட்சேவிற்கு வழங்கப்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர், மத்திய பிரதேசத்தில் இருந்து ஒருவர், குஜராத்தில் இருந்து ஒருவர் என மொத்தம் 5 மகாராஜாக்கள் இந்த கொலைக்கு உதவுயுள்ளனர் என புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

காந்தி கொலையில் இருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ் எடுத்த முயற்சிகலை சுட்டிக்காட்டிய துஷார் காந்தி, ”2017 ஆம் ஆண்டு புனேவைச் சேர்ந்த அபினவ் பாரத்தின் அறங்காவலர் பங்கஜ் பட்னிஸ், காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தில், பிர்லா ஹவுசில் இருந்த நாதுராம் கோட்சே மற்றும் நாராயணன் ஆப்தே மட்டும் கொலையாளிகள் இல்லை. மற்றொரு கொலைகாரன் இருந்துள்ளான். அவன் சுட்டதில் தான் காந்தி இறந்துள்ளார். அது தான் நான்காவது தோட்டா என குறிப்பிடப்பட்டிருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

”கொலை மற்றும் சதியில் அவர்களது பங்கைத் தெளிவுபடுத்த சாவர்கரிஸ்ட்கள் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். அதன் சமீபத்திய முயற்சி தான் ‘நான்காவது தோட்டா’ கோட்பாடு” என துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனெனில் காந்தி மரணம்குறித்த ஆவணங்கள் சரிபார்க்க உதவியாளராக அமரேந்திர சரண் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. 4000 பக்க ஆவணங்களை படித்த பிறகு நான்காவது தோட்டா இல்லை, இன்னொறு துப்பாக்கி இல்லை, இன்னொரு கொலைகாரன் இல்லை என்ற முடிவுக்கு சரண் வந்தார்.

ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி காந்தி நினைவு நாளில் காந்தியின் கட் அவுட்களுக்கு மூன்றுக்கும் அதிகமா குண்டுகளை ஆர்.எஸ்.எஸ் வழங்குகிறது என துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவளிக்க அல்லது உதவி செய்ய காங்கிரஸ்காரர்கள் தயங்குவதை சுட்டிக்காட்டிய அவர், “நேருவை அவர்கள் எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள்? நேரு ஒரு இஸ்லாமியர் என்று அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை எடுக்க ஒரு காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளனரா?. யாராவது ஒருவருக்கு எதிராக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிய முடிந்ததா?, ஆர்.எஸ்.எஸ் பரப்பும் பொய் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக காங்கிரஸில் இருக்கும் சட்ட வல்லுனர்கள் யாராவது நீதிமன்றம் செல்ல தயாரா? “ என கேள்வி எழுப்பினார்.

காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு உடன்பாடில்லை. இது தற்கொலை முயற்சிக்கு சமமானது என்று காந்தியிடம் கூறினர். அதை எல்லாம் கேட்க மறுத்த காந்தி போராட்டத்தில் தீவிரமாக இருந்ததை அடுத்து அவருக்கு ஆதரவாக நின்றனர். காந்தியும் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் காண்பித்தார். அந்த உத்வேகம் இப்போது காங்கிரஸில் இல்லை.” என துஷார் காந்தி கூறியுள்ளார்.

Source : National Herald India

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்